புதுடில்லி:தி.மு.க., மூத்த தலைவரான பொன்முடி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.இவர், 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த போது, தன் பெயரிலும், மனைவி விசாலாட்சி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து, 2016ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.இருவருக்கும் மேல்முறையீடு செய்ய, 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டது. மேலும், ஜன., 22க்குள் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டது.இதையடுத்து, அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பொன்முடி மற்றும் அவரது மனைவியின் உடல் நலனை மனதில் வைத்து, அவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, வரும் 22ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து இருவருக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.இதன் வாயிலாக, சொத்து குவிப்பு வழக்கில் கிடைக்கப் பெற்ற தண்டனையில் இருந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.அவரும், அவரது மனைவியும் சிறை தண்டனை அனுபவிப்பது தொடர்பாக, வரும் நாட்களில் நடக்கவுள்ள விசாரணையின் முடிவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.