விவசாயிகள் போராட்டத்தால் டில்லி எல்லையில்... பதற்றம்!
புதுடில்லி : ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில் இருந்து, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருதரப்புக்கு இடையேயான மோதலில், ஏழு விவசாயிகள் காயம்அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதை முன்வைத்து, 'டில்லி சலோ' அதாவது, 'டில்லி செல்வோம்' என்ற போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில், விவசாயிகள் மீண்டும் துவக்கி உள்ளனர். தடுத்து நிறுத்தம்
இந்த போராட்டத்தில் டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து, டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தினர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று, ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றனர். இதனால் விவசாயிகள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த மோதலில் ஆறு விவசாயிகள் காயமடைந்தனர். இதனால் ஷம்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதே போல், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் இருந்து டில்லிக்கு செல்ல விவசாயிகள் நேற்று முயன்றனர்.அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாயிகள் நேற்று அறிவித்தனர். மீண்டும் பேரணி
இதுகுறித்து, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ''எங்கள் போராட்டத்தை கைவிடு கிறோம். மத்திய அரசுடன் பேச்சு நடத்த காத்திருக்கிறோம். பேச்சு நடத்த அரசு முன்வராவிட்டால், நாளை மதியம் 12:00 மணிக்கு மீண்டும் டில்லியை நோக்கி பேரணி நடத்துவோம். ''துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் பேச்சைக் கூட பிரதமர் மோடி கேட்பதில்லை. எங்களுடன் பேச்சு நடத்தி இருந்தால், நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம்,'' என்றார். விவசாயிகள் போராட்டத்தையொட்டி, ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில், வரும் 9ம் தேதி வரை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் உறுதி
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:விவசாயிகளின் அனைத்து விளை பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என, உறுதி அளிக்கிறேன். இது மோடி அரசின் உத்தரவாதம்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை மத்தியில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்., அரசு ஏற்க முடியாது என தெரிவித்தது. ஆனால் தற்போது அரசியல் லாபத்திற்காக அக்கட்சி இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை காங்., ஒருபோதும் கவனத்தில் எடுத்துக் கொண்டதில்லை. ஏற்கனவே விவசாயிகளுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு வழங்கி வருகிறது. நெல், கோதுமை, சோளம், சோயாபீன் ஆகியவை உற்பத்தி செலவை விட, 50 சதவீதம் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையை, 50 சதவீதத்திற்கும் மேல் லாபத்தில் நிர்ணயம் செய்து விவசாயிகளின் விளை பொருட்களை வாங்குவோம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எப்போதும் செவி சாய்க்கும். இந்த அரசு விவசாயிகளின் நண்பனாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.