| ADDED : ஏப் 12, 2025 01:09 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன், ராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கடந்த 9ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, வனப்பகுதியில் மறைந்துஇருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்று பயங்கரவாதிகளும் தப்பியோடினர்.இதைத்தொடர்ந்து, தோடா மாவட்டத்தின் வனப்பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தங்களின் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தி உள்ளனர். இப்பகுதியில் மைனஸ் டிகிரி குளிர் பதிவாகி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப் படையினர், மோப்ப நாய் உதவியுடன் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் வாயிலாகவும் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.