உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை... வெற்றி !:  ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவும் அசத்தல்

வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை... வெற்றி !:  ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவும் அசத்தல்

புதுடில்லி,: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதே போல், 'ககன்யான்' திட்டத்தில், வேக குறைப்பு அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனையையும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு மிக மிக அவசியம். போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இடைமறித்து தாக்க இந்த அமைப்பு உதவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gib9nrlo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகிலேயே சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பாக, மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' கருதப்படுகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள், ஈரான், லெபனான், ஏமன் என பல முனை தாக்குதல்கள் இருந்த போதும், அவற்றை சிறப்பாக எதிர்கொண்டு, இஸ்ரேலின் அயர்ன் டோம் சக்கைப்போடு போடுகிறது.  ரஷ்யாவின், எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பை நம் நாடு பயன்படுத்தி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய சண்டையில், அந்நாட்டின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததில், எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது. நாட்டின், 79வது சுதந்திர தினத்தையொட்டி, கடந்த 15ல், டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'சுதர்சன சக்ரா என்ற பெயரில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவசம், அடுத்த 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார். இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., வெற்றிகரமாக நடத்தி உள்ளது. எதிரியின் பீரங்கியை துரிதமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, மிகக் குறுகிய துார வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை மற்றும் உயர் சக்தி லேசர் அடிப்படையில் நேரடியாக தாக்கும் ஆயுதம் உள்ளிட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு கொண்டுள்ளது. வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சமூக வலைதளத்தில் டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட பதிவில், 'ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனை, கடந்த 23ம் தேதி பகல் 12:30 மணிக்கு ஒடிஷாவில் வெற்றிகரமாக நடந்தது. 'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு, பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பாராட்டு தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பாராட்டுகள். இதற்காக பாடுபட்ட டி.ஆர்.டி.ஓ., ஆயுதப் படைகள் மற்றும் தொழில் துறைக்கு வாழ்த்துகள். இந்த தனித்துவமான சோதனை, நம் நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவிஉள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நம் பாதுகாப்பை இது வலுப்படுத்தப் போகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

'ககன்யான்' சோதனை அபார வெற்றி

வரும் 2028ல், விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பி ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, 'ககன்யான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர் உள்ளிட்ட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நம் வீரர் சுபான்ஷு சுக்லா சமீபத்தில் சென்று வந்தார். ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக, வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும்போது, விண்கலத்தில் இருந்து தனியே பிரியும் கலனின் வேகத்தை குறைக்க, பிரத்யேக பாராசூட் பொருத்தப்பட்டது. அந்த வேகக் குறைப்பு அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை யில், 'ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்து வரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனை வெற்றி அடைந்தது. 'இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., விமானப் படை, கடற்படை என பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் சோதனை நடத்தப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்துவதற்கான துவக்கம் என, நிபுணர்கள் தெரிவி த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி