மைசூரு : மைசூரு, 'முடா' அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. அமலாக்க துறையினர் கேட்ட, 'கிடுக்கிப்பிடி' கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் முடா அதிகாரிகள் திணறினர். முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் அள்ளி சென்றனர்.மைசூரு முடா சார்பில், வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக, மூன்று மாதங்களுக்கு முன்பு பா.ஜ., குற்றச்சாட்டு கூறியது. முதல்வர் சித்தராமையா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், அமலாக்கத் துறையில் அளித்த புகார்களில், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆவணங்கள்
இந்நிலையில், கடந்த 18ம் தேதி மதியம் 12:00 மணிக்கு, முடா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென வந்து, சோதனை நடத்தினர். அன்றைய தினம் நள்ளிரவு 12:00 வரை சோதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் நேற்று அதிகாலை 3:00 மணி வரை தொடர்ந்து 17 மணி நேரம், முடா அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.இதில், பல்வேறு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இரண்டு நாட்கள் 29 மணி நேரம் முடா அலுவலகம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது.சோதனையில் சிக்கிய சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். முடா கமிஷனர் ரகுநந்தன் உட்பட அதிகாரிகளிடம், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, அமலாக்கத் துறையினர் திணறடித்தனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், முடா அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர்.குறிப்பாக கமிஷனராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரகுநந்தனிடம், பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலே இல்லை. 'நான் இப்போது தான் வந்து உள்ளேன்' என்று, திரும்ப திரும்ப கூறி இருக்கிறார். அடுத்த கட்டம்
சாப்பிட கூட செல்லாமல், ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து, முடா அலுவலகத்தில் வைத்தே அமலாக்கத் துறையினர் சாப்பிட்டு உள்ளனர். இரண்டு நாட்கள் தொடர் சோதனையால், பரபரப்பாக இருந்த முடா அலுவலகம், நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. தங்களிடம் சிக்கிய ஆவணங்களை வைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள, அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி, மகன் யதீந்திரா, முடா முன்னாள் தலைவர் மரிகவுடா, நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கும், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.முடா ஆவணங்களை ஹெலிகாப்டரில் எடுத்து சென்று, எரித்ததாக பைரதி சுரேஷ் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். 'நான் அப்படி செய்யவில்லை. தேவைப்பட்டால் தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் செய்யவும் தயார்' என்று, பைரதி சுரேஷ் கூறி இருக்கிறார்.முடாவில் நிலம் வாங்கியதில் சித்தராமையா குடும்பத்திற்கு மட்டும் சிக்கல் இல்லை. எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர்கள் மூலமாக சிபாரிசு கடிதம் வாங்கி, முடாவில் 50:50 திட்டத்தின் கீழ், நிலம் வாங்கிய பலருக்கும் சிக்கல்ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருபுறமும் அடி
யார், யார் 50:50க்கு திட்டத்தின் கீழ் நிலம் பெற்றனர். அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்களா என்றும், ஆவணங்களை அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது. இதனால் மைசூரு மாவட்ட அரசியல்வாதிகளின், தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் லோக் ஆயுக்தாவும் முதல் கட்ட விசாரணையை முடித்துள்ளது. வரும் நாட்களில் சித்தராமையாவிடம், லோக் ஆயுக்தா விசாரிக்கவும் வாய்ப்பும் உள்ளது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் மாறி உள்ளது, சித்தராமையாவின் நிலைமை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.