காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே முற்றுகிறது மோதல்! : மூடா முறைகேடு தொடர்பாக அரசுக்கு கடிதம்
பெங்களூரு : முதல்வர் சித்தராமையா உத்தரவின்படி, 387 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை, 'மூடா' முறைகேடாக மேற்கொண்டதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரை சேர்ந்த நடராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, தலைமை செயலருக்கு, கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் வாயிலாக, காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ளது.'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, 14 மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, மைசூரில் லோக் ஆயுக்தா போலீசில் சமூக ஆர்வலர் ஆபிரகாம் புகார் அளித்தார்.இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்தும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். சமூக ஆர்வலர்கள், ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும் முதல்வர் மீது கொடுக்க புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்தார். நீதிமன்ற தீர்ப்பு
கவர்னரின் இந்த அனுமதியை எதிர்த்து, முதல்வர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இம்மனு மீது, அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதமும் நிறைவு பெற்றது. தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். மாநிலம் முழுதும் கவர்னருக்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்தி, கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அப்போது முதல், காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அதன்பின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்ப நிறுவனத்துக்கு, 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீக்கு, சமீபத்தில் கவர்னர் கடிதம் எழுதி இருந்தார்.மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த, 2023 மே 20ம் தேதி முதல், இந்த மாதம் வரை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது, லோக் ஆயுக்தா போலீசில் பதிவாகி உள்ள ஊழல் வழக்கு விபரங்கள் குறித்து அறிக்கை தரும்படி சில நாட்களுக்கு முன், அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு கடிதத்தை, மாநில அரசுக்கு கவர்னர் அனுப்பியுள்ளார். ரூ.387 கோடி
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: 'மூடா'வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, மைசூரை சேர்ந்த பி.எஸ்.நடராஜ் என்பவர், முழு விபரங்களுடன், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி எனக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வரின் தொகுதியான வருணாவிலும், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியிலும் 'மூடா' சார்பில், 387 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு முறைகேடு பணிகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மூடாவில் நிதி இல்லாத போது, முதல்வரின் வாய்மொழி உத்தரவுப்படி, பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர், அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் தெரிவித்து, சி.பி.ஐ., விசாரணை கோரியுள்ளார். மிகவும் தீவிரமான இந்த விஷயத்தில் பரிசீலனை நடத்தி, முழு விபரங்களுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கவர்னரின் தொடர் கடிதங்களால், காங்கிரஸ் அரசு கதிகலங்கி போயுள்ளது. இதனால், காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ளது.