அனுபவமிக்க போலீசாரை 18 படிகளில் நிறுத்த முடிவு
சபரிமலை:கடந்தாண்டு மண்டல, மகர விளக்கு கால சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், 24 முதல் 48 மணி நேரம் வரை பக்தர்கள் காடுகளில் சிக்கி தவித்தனர். சபரிமலையின் புனிதமான 18 படிகளில் ஏற, 12 முதல் 18 மணி நேரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் பலரும் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.நடப்பாண்டு நவ., 15ல் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.சபரிமலையில், கடந்த ஆண்டுகளில் பணிபுரிந்து அனுபவம்மிக்க 150க்கும் மேற்பட்ட போலீசாரை தேர்வு செய்து, 18 படிகளில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.சீசன் முடியும் வரை சபரிமலையில் தங்கி பணிபுரியும் இவர்கள், நான்கு ஷிப்ட்டுகளாக பணியில் ஈடுபடுவர் என, கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.