வலை வளை: நவ. 20
ஒற்றை வீடியோவில் உலகை வென்ற சிறுவன் மஹாராஷ்டிராவின் யவத்மாலைச் சேர்ந்த, 2 வயது சிறுவன் ருத்ரன்ஷ் சிங் தாக்குர், பெற்றோருடன் டூவீலர் ஷோரூமுக்கு சென்றான். புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பெற்றோர் வாங்கிய போது, அதன் முன் நின்றபடி, கண்ணாடி அணிந்து, கைகளை பாக்கெட்டில் வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்தான் சிறுவன். அவனது வீடியோ இன்ஸ்டாகிராமில், 13.7 கோடி பார்வைகளையும், 68,000-க்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றது. பலர் சிறுவனை, ‘லிட்டில் டான்’ என்றும், ‘ஸ்டைல் கிங்’ என்றும் புகழ்ந்தனர். வலைதளங்களில் கிடைத்த வரவேற்பை பார்த்த ஷோரூம் உரிமையாளர் திலீப் போபடே பாட்டீல், சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டு அவகாசம் இருந்தும் 5 ஆண்டில் கடன் ‘க்ளோஸ்’ கேரளாவின் கோழிக்கோடு ஐ.ஐ.எம்., நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்க, 25 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெற்றார், டிம்பிள் போர்வால். கடனை அடைக்க அவருக்கு வங்கி, 15 ஆண்டுகள் அவகாசம் வழங்கியது. ஐந்து ஆண்டுகளில் டிம்பிள் கடனை அடைத்து விட்டார். அவருக்கு, 10 லட்சம் ரூபாய் வட்டி மிச்சம். தற்போது மைக்ரோசாப்டில் பணியாற்றும் அவர், தன் கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ‘முதல் சம்பளத்துக்கு முன்பே திட்டம் வகுத்தேன்; ஒரு தவணையை கூட தவறவிடவில்லை; ஆண்டுக்கு நான்கு கூடுதல் தவணை செலுத்தினேன்; போனஸ், பங்கு பரிசுகளை கடனுக்கு செலுத்தினேன்’ என்கிறார் அவர். வலைதளவாசிகள் பலரும் அவரை பாராட்டுகின்றனர். உயிர்ப்புடன் மனிதநேயம் உணர்ந்த பெண் நெகிழ்ச்சி மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவின் பார்க் வீதியில் பைக் டாக்சியில் சென்ற பிந்தியால் குப்தா மீது கார் மோதி விட்டது. அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. சாலையில் சென்ற ஐந்து பேர் அவருக்கு உதவினர். ‘என்னை துாக்கி நிறுத்திய அவர்கள், பை, காலணிகள், போனை மீட்டுக் கொடுத்தனர். காயங்களுக்கு கட்டுப் போட்டனர். அவர்களின் பெயர்கள் எனக்கு தெரியாது; அவர்களின் கருணையை ஒருபோதும் மறக்க மாட்டேன். மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபித்தீர்கள்’ என, பிந்தியால் வெளியிட்ட வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. மரத்தை வெட்டியது சரியா? கதறி அழுதார் நடிகை கடலோர சாலை திட்ட சந்திப்புக்காக, மும்பை நானா நானி பூங்காவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. 184 மரங்களை வெட்டவும், 164 மரங்களை மறு நடவு செய்யவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. பணி தொடங்கிய நிலையில், வெட்டி வீழ்த்தப்பட்ட ஆலமரத்தை கட்டி அணைத்தபடி நடிகை பூஜா ரூபரேல் கதறும் வீடியோ வெளியானது. இவர், தில்வாலே துல்கானியா லெ ஜெயங்கே படத்தில் நடித்தவர். ‘வெட்டுவதற்காக மரத்தின் வயதை குறைத்து கூறியுள்ளனர். இந்த மரத்தை பாருங்கள்; அதன் கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா’ என, பூஜா உருக்கமாக பேசும் வீடியோ வலைதளங்களில் பரவுகிறது. நடிகை தியா மிர்சாவும் மரம் வெட்டுவதை எதிர்த்து பதிவிட்டுள்ளார். உயிர் காத்த எஸ்.ஐ., குவிகிறது பாராட்டு வட மாநிலங்களில் பிரபலமான, ‘சாத்’ பூஜை கடந்த வாரத்தில் நடந்தது. மேற்கு வங்கம், பன்குரா, தாமோதர் நதியில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பெற்றோர் கவனிக்காத நேரத்தில், 3 வயது சிறுமி பிரின்சிகா குமாரி நீரில் மூழ்கி விட்டாள். ஒருசில வினாடிகளுக்கு பிறகே சிறுமி, தண்ணீரில் மூழ்கி விட்டதை உணர்ந்து அலறினர். அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ., ஆகாஷ் பத்ரா, சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து விட்டார். நீருக்குள் மூழ்கிய அவர், சிறுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தார். தக்க நேரத்தில் மீட்டதால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடிந்தது. எஸ்.ஐ., ஆகாஷுக்கு அங்கிருந்த பெற்றோர், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேற்கு வங்க போலீசாரின் பதிவை கண்ட வலைதளவாசிகள், எஸ்.ஐ.,யை பாராட்டுகின்றனர்.