பஞ்சமசாலிகள் மீது தடியடி நடத்திய விவகாரம் சட்டசபை, மேல்சபையில் கடும் வாக்குவாதம்
பெலகாவி: பஞ்சமசாலிகள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில், சட்டசபை, மேல்சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.லிங்காயத் சமூகத்தின் உட்பிரிவான, பஞ்சமசாலி சமூகத்தினர் '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு, கடந்த 10ம் தேதி பெலகாவி சுவர்ண விதான் சவுதாவை முற்றுகையிட முயன்றனர். தடுத்து நிறுத்திய போலீசார் மீது, கல்வீசியதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இதை கண்டித்து நேற்று முன்தினம் சட்டசபை, மேல்சபையில் கேள்வி எழுப்ப, பா.ஜ., உறுப்பினர்கள் தயாராக இருந்தனர். ஆனால் முன்னாள் முதல்வர் கிருஷ்ணா மறைவால், நேற்று முன்தினம் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வேதனை, வலி
நேற்று காலை சட்டசபை துவங்கியதும், பஞ்சமசாலிகள் மீது தடியடி நடத்தியது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக், உறுப்பினர்கள் அஸ்வத் நாராயணா, அரக ஞானேந்திரா, சுனில்குமார் உள்ளிட்டோர், சபாநாயகர் காதரிடம் கேட்டனர். தடியடி நடத்தப்பட்டது வேதனை அளிக்கிறது என்று சுனில்குமார் கூறினார்.அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரசாமி, ''பஞ்சமசாலிகள் அனுபவிக்கும் வேதனை, வலிகளுக்கு பா.ஜ., தான் காரணம்,'' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.அந்த நேரத்தில் அங்கு வந்த, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத், ''அமைதியான முறையில் போராட்டம் நடத்திய, எங்கள் சமூகத்தினர் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்,'' என்றார். ஒத்திவைப்பு
அப்போது குறுக்கிட்ட, காங்கிரஸ் உறுப்பினர் விஜயானந்த் காசப்பனவர் பேசுகையில், ''போராட்டத்தில் கல் எறிந்தவர்கள், எங்கள் சமூகத்தினர் இல்லை. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் தான் கல்வீசினர்,'' என்று கூறினார்.இதனால் ஆவேசம் அடைந்த, பா.ஜ., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் குரலை உயர்த்தினர். இரு கட்சி உறுப்பினர்களும் மாறி, மாறி கூச்சலிட்டதால், சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகின்றனர் என்றே கேட்கவில்லை. இதையடுத்து கூட்டத்தை சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.சட்டசபையை போலவே மேல்சபையிலும், பஞ்சமசாலிகள் மீது தடியடி நடத்திய பிரச்னை எதிரொலித்தது. இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மேல்சபையில் முதல்வர் சித்தராமையா அளித்த பதில்:கடந்த 2002ல் பல்வேறு சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது ஏன் இடஒதுக்கீடு வேண்டும் என்று பஞ்சமசாலி சமூகத்தினர் கேட்கவில்லை. கடந்த 2021 - 2022ம் ஆண்டு பா.ஜ., ஆட்சியில் முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பிரச்னை துவங்கியது. 4 சதவீதம்
பசவராஜ் பொம்மை அரசு 2சி, 2டி புதிய இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீட்டை குறைத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் விளக்கம் அளித்த துளசி மத்தினேனி என்ற அதிகாரி இடஒதுக்கீட்டு பிரிவை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று பிரமாண பத்திரம் அளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.சபைக்குள் மத அடிப்படையில் பேசுவது சரியல்ல என்று கூறி, முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., உறுப்பினர்கள் மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி இருக்கைக்கு முன்பு வந்தனர்.மீண்டும் பேசிய சித்தராமையா, ''பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது,'' என்று கூறினார்.முதல்வரின் இந்த பேச்சு பஞ்சமசாலி சமூகத்திற்கு, 2ஏ இடஒதுக்கீடு வழங்க முடியாது என்பதை, சூசகமாக சொல்லும் வகையில் அமைந்து உள்ளது.