உள்ளூர் செய்திகள்

முன்னிலை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பஞ்சாயத்து குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் பா.ஜ.,வை பின்னுக்குத் தள்ளி காங்., அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள, 37 மாவட்ட ஊராட்சிகளில், 27ல் காங்., வென்ற நிலையில், வெறும் ஆறு மாவட்டங்களையே பா.ஜ., கைப்பற்றி உள்ளது. 419 பஞ்சாயத்து குழுக்களில், 269ஐ கைப்பற்றி காங்., சாதனை படைத்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 41 மாவட்டங்களில் உள்ள மொத்தம், 1,403 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 457 பஞ்சாயத்து குழுக்களின், 8,245 வார்டுகளுக்கு நான்கு கட்டங்களாக சமீபத்தில் தேர்தல் நடந்தது. கோட்டா, பரான், ஸ்ரீ கங்காநகர், கரவுலி ஆகிய நான்கு மாவட்டங்களில், தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதால், அந்த மாவட்டங்களில் மட்டும், டிச., 17ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள, 1,275 வார்டுகள் மற்றும் 419 பஞ்சாயத்து குழுக்களில் உள்ள, 7,543 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநில தேர்தல் கமிஷனின் தரவுகளின்படி, 37 மாவட்ட ஊராட்சிகளில், 27ல் வெற்றி பெற்று காங்., சாதனை படைத்துள்ளது. அதாவது, 1,275 வார்டுகளில், 794ல் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜ., வெறும் ஆறு மாவட்ட ஊராட்சிகளையே கைப்பற்றி உள்ளது. 357 வார்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், அல்வார், சிகார், பார்மர், முதல்வர் பஜன்லால் சர்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூர், பிகானீர், ஜுன்ஜுனு, தவுசா, சித்தோர்கர், ஜெய்சல்மார், கோட்புட்லி- பெஹ்ரோர், சுரு, ஜலோர், காங்., மூத்த தலைவர் சச்சின் பைலட்டின் கோட்டையான டோங்க், தோல்பூர், பலோடி, பூந்தி, பில்வாரா, ராஜ்சமந்த், சவாய் மாதோபூர், சிரோஹி, ஹனுமன்கர், டீக், பன்ஸ்வாரா ஆகிய மாவட்ட ஊராட்சிகளை காங்., வென்றுள்ளது. உதய்பூர், அஜ்மீர், பாலி, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜேவின் சொந்த மாவட்டமான ஜலாவர், பீவார், சலும்பர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஹனுமான் பெனிவால் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி, நாகவுர் மாவட்ட ஊராட்சியை கைப்பற்றி, முதன்முறையாக தனித்து நிர்வாகம் செய்ய உள்ளது. அதே போல், 419 பஞ்சாயத்து குழுக்களில், 219ல் காங்., வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 7,543 பஞ்சாயத்து குழு வார்டுகளில், 3,758ல் அக்கட்சி வென்றுள்ளது. பா.ஜ., 2,213; ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி – 497; சுயேச்சைகள் – 662 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில், 2028ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளன. அதே சமயம், ஆளும் பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி