முடா வழக்கு சித்து மீது அமலாக்க துறை வழக்கு
பெங்களூரு, 'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா, 76. இவரது மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை லே -- அவுட் அமைப்பதற்காக, 'முடா' எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக, மைசூரு நகரின் மையப் பகுதியான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவிக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் மீது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சித்தராமையா, பார்வதி, முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார். 26ம் தேதி முதல்வர் உட்பட நான்கு பேர் மீது, 17 பிரிவுகளில் வழக்கு பதிவானது.வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையா சேர்க்கப்பட்டார். இதனால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ''என் மீது எந்த தவறும் இல்லை; ராஜினாமா செய்ய மாட்டேன்,'' என முதல்வர் அடம்பிடித்து வருகிறார்.இந்நிலையில், முதல்வர் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, ''முடா வழக்கை லோக் ஆயுக்தாவால் சிறப்பாக விசாரிக்க முடியாது. மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்தால் தான் நியாயம் கிடைக்கும்,'' என கூறி இருந்தார்.முடா வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, கடந்த 28ம் தேதி அமலாக்கத் துறைக்கு அவர் புகார் செய்தார்.நேற்று காலை பெங்களூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று, முதல்வர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின்படி, சித்தராமையா மீது நேற்று மாலை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.