உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்துவின் நிம்மதியை கெடுத்த முடா வழக்கு

சித்துவின் நிம்மதியை கெடுத்த முடா வழக்கு

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் சொந்த ஊரான மைசூரில் முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டுமனை ஒதுக்கியதில் 4,000 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து இருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கடந்த ஜூனில் குண்டு துாக்கி போட்டார். இங்கிருந்து தான் முதல்வர் சித்தராமையாவுக்கும் பிரச்னை ஆரம்பித்தது.அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் பாதயாத்திரை நடந்தது. கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வும் பங்கேற்றது.மனைவிக்கு வீட்டுமனை வாங்கி கொடுத்த விவகாரத்தில், முதல்வர் மீது விசாரணைக்கு உத்தரவிட கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புகார் அளித்தார்.சித்தராமையாவிடம் விசாரணை நடத்த, கவர்னரும் அனுமதி கொடுத்தார். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றமும் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, சித்தராமையா நிலை ஆனது.நீதிமன்ற உத்தரவுபடி சித்தராமையா மீது வழக்கு பதிவானது. வழக்கின் குற்றவாளி 1 ஆக சேர்க்கப்பட்டார். தன்னிடம் விசாரிக்க கவர்னர் அளித்த அனுமதிக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், முதல்வர் வழக்கு தொடர்ந்தார். நீண்ட நெடிய விசாரணைக்கு பின், கவர்னர் அளித்த அனுமதி செல்லும் என்று தீர்ப்பு கூறி, சித்தராமையாவுக்கு, நீதிபதி நாகபிரசன்னா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.தனி நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் முதல்வர் மேல்முறையீடு செய்து உள்ளார். அதன் மீது விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையில் முடாவில் நடந்த முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறையும் விசாரித்தது. பீதியில் 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டு மனைகளை முடாவிடம் திரும்ப ஒப்படைத்தார்.எந்த நேரத்திலும் சித்தராமையாவை, அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் அவர் பீதி அடைந்தார். நல்ல வேளையாக இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. ஆனாலும் முடா வழக்கு, சித்தராமையாவின் நிம்மதியை கெடுத்து விட்டது என்பதே நிதர்சனம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி