வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கத்தியின் உடைந்த பாகம்.
சயீப் அலிகான் போட்டோ அருகே இருப்பது மத்தி மீனா இல்லை கத்தியா??? கைப்பிடியை காணோம்
புனே: ''நடிகர் சயீப் அலிகான் மீதான கத்தி குத்து சம்பவத்தில் கிரிமினல் கும்பல்களுக்கு தொடர்பில்லை; கொள்ளை மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது,'' என, மஹாராஷ்டிரா உள்துறை இணைஅமைச்சர் யோகேஷ் கடம் தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள, 12வது மாடியில், நான்கு தளங்களுடன் இவரது வீடு உள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர், மகன்கள் தைமூர் மற்றும் ஜேஹ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம நபர், சயீப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.இதில், அவரது முதுகுத்தண்டுக்கு மிக அருகே, 6 செ.மீ., ஆழத்துக்கு கத்தி பாய்ந்து சிக்கிக் கொண்டது; கழுத்திலும் ஆழமான காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின், முதுகில் சிக்கியிருந்த கத்தியின் பாகம் வெளியே எடுக்கப்பட்டது.அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கத்தி இன்னும் சற்று ஆழமாக பாய்ந்திருந்தால், சயீப் அலிகான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு அவர் நேற்று மாற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த கத்தி குத்து சம்பவம் குறித்து, மஹாராஷ்டிரா உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கடம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:சயீப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர் தப்பியோடியபோது, ஆறாவது மாடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது முகம் பதிவாகி இருந்தது. அந்த முகத்துடன் ஒத்து போகும் நபர் ஒருவரை, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மும்பையில் கைது செய்து உள்ளனர். அவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கத்தி குத்து சம்பவத்தில் சில கிரிமினல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இதன் பின்னணியில் திருட்டு மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள சில மூத்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது:சயீப் அலிகான் வசித்த வீட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால், குற்றவாளியை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும் வெளியாட்களை கண்காணிக்க, அதன் நுழைவாயில் மற்றும் உள்புறத்தில் பாதுகாவலர்கள் இல்லை. வெளியாட்களின் விபரங்களை பதிவு செய்யும் பதிவேடு கூட அங்கு பராமரிக்கப்படவில்லை. வீட்டுக்குள் நுழைந்த நபருக்கு, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் எல்லா பகுதிகளிலும் பரிச்சயம் உள்ளது. எனவே தான் அவர் யார் கண்களிலும் சிக்காமல், அவசர காலத்தில் பயன்படுத்தும் பின்புற படிக்கட்டுகள் வழியாக 12வது மாடிக்கு சென்றுள்ளார்.சயீப் வீட்டு பணியாளர்களுடன் தொடர்புடைய நபர் குற்றவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கத்தியின் உடைந்த பாகம்.
சயீப் அலிகான் போட்டோ அருகே இருப்பது மத்தி மீனா இல்லை கத்தியா??? கைப்பிடியை காணோம்