தென்பெண்ணை ஆறு வழக்கு மத்திய அரசு பிரமாண பத்திரம்
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக, இரு மாநில அரசுகளும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக, மத்திய அரசு தனியாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க அறிவுறுத்தியது. தீர்ப்பாயம் அமைக்கும் பணி தாமதமாகி வந்த நிலையில், மத்திய அரசு தன் தரப்பு விஷயங்களை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இதையடுத்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: தமிழகம், கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு விவகாரம் குறித்து பேச, நீர்வளத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு, கடந்த மார்ச், 18ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டிய தேவை இல்லை என தெரிவித்ததுடன், நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இதனால், அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -