நாடு முழுதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்: மாணவர்கள் எண்ணிக்கை 33 லட்சம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருவது, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதில், 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வி உரிமை சட்டம் மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் - 2009ன்படி, துவக்க பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்றும், மேல்நிலை பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என வரையறுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், 2024 - 25 கல்வியாண்டிற்கான தரவுகளை மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, நம் நாட்டில் ஓர் ஆசிரியரால் நடத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 1,04,125 ஆகவும், அப்பள்ளிகளில் மொத்தம் 33,76,769 மாணவர்கள் படித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ஒரு பள்ளிக்கு, 34 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருப்பதாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆந்திரா முதலிடம் ஓர் ஆசிரியருடன் நடத்தப்படும் பள்ளிகள், அதிகபட்சமாக ஆந்திராவில் 12,912 இயங்கி வருகின்றன. அடுத்தடுத்த இடங்களில் உ.பி.,யில் 9,508; ஜார்க்கண்டில் 9,172; மஹாராஷ்டிராவில் 8,152; கர்நாடகாவில் 7,349 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவ்வகை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 6,24,327 பேருடன் உ.பி., முதலிடத்தை பிடித்துள்ளது.