உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை!

வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை!

நாடு முழுதும் வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து, வக்ப் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது. நாடு முழுதும் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் வழங்கும் நிலங்கள், சொத்துக்கள் ஆகியவற்றை வக்ப் வாரியம் நிர்வகித்து வருகிறது. வக்ப் சொத்துக்களின் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், 1995ல் கொண்டு வரப்பட்ட வக்ப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து பார்லி.,யில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திருத்த மசோதா பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமானது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வக்ப் சட்டத் திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதே நேரம் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதன் விபரம்:  வக்ப் வாரியத்துக்கு சொத்துக்களை தானமாக வழங்க முன்வரும் நபர், ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நிறுத்தி வைக்கிறோம். மாநில அரசுகளும் இதற்கான விதிகளை உருவாக்கும் வரை இந்த சட்டப்பிரிவு நிறுத்தப்படுகிறது.  வக்ப் வாரிய சொத்து விசாரணை ஷரத்துகளில் ஒரு பிரிவை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். அதாவது, வக்ப் வாரிய சொத்துக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக வைத்து எந்தவொரு சொத்து ஆவணங்களையும் திருத்தக் கூடாது.  ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்ப் சொத்து மீது, தீர்ப்பாயம் முடிவெடுக்கும் வரை, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.  அதே சமயம் அந்த சொத்து தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் கலெக்டருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிக்கிறோம்.  மத்திய வக்ப் கவுன்சிலின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சமாக நான்கு பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம்.  11 பேர் கொண்ட மாநில வக்ப் வாரியங்களில் அதிகபட்சமாக மூன்று பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கலாம். வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக முடிந்தவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என கருதுகிறோம். இந்த உத்தரவுகள் அனைத்தும் இடைக்காலமாக பிறப்பிக்கப்படுகிறது. மேலும், இந்த உத்தரவு திருத்தப்பட்ட ஷரத்துகளின் அரசியலமைப்பு தன்மையை நிச்சயம் பாதிக்காது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பும் வரவேற்பு: யாருக்கு சாதகம்? உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது, நம் பார்லி., ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல அறிகுறி. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு, இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும், நமது அமைப்புகள் மீதான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. “அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீதியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள விதிகள் குறித்து அரசு ஆராயும்,” என்றார். காங்., பொதுச்செயலர் ஜெயராம் ரமேஷ், 'இந்த உத்தரவு, வாயிலாக வக்ப் விவகாரத்தில், கலெக்டர்களின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வக்ப் சொத்துக்களை சந்தேகத்திற்குரிய சவால்களில் இருந்து பாதுகாத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு கிடைத்த வெற்றி' என, தெரிவித்துள்ளார். 'இந்த உத்தரவு வாயிலாக சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஸ்டாலின் பாராட்டு 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கூறுகையில், 'மத்திய பா.ஜ., அரசு செய்துள்ள வக்ப் சட்ட திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக, உச்ச நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது. 'முஸ்லிம்களின் மத உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும், உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில், இந்த உத்தரவு அமைந்துள்ளது' என, தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.,வும், வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என இரு தரப்புகளுமே வரவேற்றுள்ளன. 'வக்ப் சட்டத்தில், முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ