ரேவாரி :''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை விரும்பாத, ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட துவங்கியுள்ளனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சுகாதாரம்
ஹரியானாவின் ரேவாரியில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா உட்பட, நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலா தொடர்பான, 9,770 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த 2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் நான் பங்கேற்ற முதல் கூட்டம், ஹரியானாவின் ரேவாரியில் தான் நடந்தது. அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற உத்தரவாதத்தை அளித்தேன். அது இன்று நிறைவேறியுள்ளது. இப்போது மீண்டும் ரேவாரி வந்துள்ளேன். எனவே, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மக்கள் ஆசியுடன் தே.ஜ., கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும்.ஜனநாயகத்தில் சீட்டுகள் மிக முக்கியம் என்றாலும், மக்கள் ஆசிர்வாதம் தான் எனக்கு முக்கியம். நம் நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக உயர்த்த உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை.உலக அரங்கில் பல புதிய உயரங்களை நம் நாடு இன்றைக்கு தொட்டுள்ளது. மக்கள் ஆசிர்வாதத்தால் மட்டுமே அவை சாத்தியமானது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் மோடிக்கானது அல்ல; ஒவ்வொரு இந்தியருக்குமானது. அடிக்கல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை விரும்பாத, ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியினர், இன்றைக்கு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.அதன் பின், 'வளர்ந்த பாரதம்; வளர்ந்த ராஜஸ்தான்' திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கான 17,000 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டி பிரதமர் உரையாற்றினார்.