ஆமதாபாத்: நாடு முழுதும் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்பு படையினர் குஜராத்தில் கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் பாதுகாப்பு படையினர் அழித்தனர். இதில் நிலைகுலைந்த பயங்கரவாத அமைப்புகள், சில மாதங்களாக அமைதி காத்தன. இந்நிலையில் புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர் - -இ - -தொய்பா, ஜெய்ஷ்- - இ- - முகமது, ஐ.எஸ்., ஆகியவை சதி செயலுக்கு திட்டமிட்டுள்ள அதிர்ச்சிக்குரிய தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன. இதுதொடர்பான உளவு தகவலின்படி, பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல், ஆயுதங்களை கடத்தி கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் வழியே இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழு உதவியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும் ஆதரவளித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினருக்கு சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, குஜராத்தில் காந்திநகர் மாவட்டத்தின் அதலஜ் சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில், மூன்று துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள், ஆபத்தான 'ரிசின்' என்ற ரசாயன திரவம் 4 லிட்டர் இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இந்த காரை ஓட்டி வந்த தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் அகமது முகைதீன் சையதை, போலீசார் கைது செய்தனர். இதேபோல் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டு, ஆயுதங்கள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சுஹைல், ஆசாத் சுலைமான் சைபி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் தொடரும் சோதனை
பயங்கரவாதிகள், பாக்., எல்லை வழியாக நம் நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். இதைத் தடுக்க, ஜம்மு - காஷ்மீரில், பாக்., எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ராம்பன், கதுவா, ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணிப்பது, பாக்.,கை மையப்படுத்தி இயங்கும் பயங்கரவாத கும்பல்களுக்கு உதவும் ஜம்மு - காஷ்மீர் மக்களை கண்டறிவது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, நம் நாட்டில் பயன்படுத்தும் சிம் கார்டுகளை, பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. குல்காம், பாரமுல்லா, புல்வாமா, கந்தர்பால், குப்வாரா, ஸ்ரீநகர், சோபியான் மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் அத்தகைய சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிசின் என்றால் என்ன?
ஆமணக்கு விதையில் கசடுகளாக வெளியேற்றப்படும் பொருள் தான் ரிசின். இது, சயனைடை விட மிகக்கொடிய விஷத்தன்மை கொண்டது. இதை சுவாசித்தாலோ, ஊசி மூலம் உடலில் செலுத்தினாலோ அல்லது வாய் வழியாக உட்கொண்டாலோ உடனடி மரணம் ஏற்படும்.