மரத்தில் மோதிய கார் 2 டாக்டர் உட்பட மூவர் பலி
பல்லாரி: சாலையில் வந்து கொண்டிருந்த கார், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.பல்லாரி பிம்ஸ் மருத்துவமனை புற்றுநோய் டாக்டர் கோவிந்தராஜுலு, கண் டாக்டர் யோகேஷ், வழக்கறிஞர் வெங்கடநாயுடு, தனியார் மருத்துவர் அமரேகவுடா ஆகியோர் சில நாட்களுக்கு முன் பாங்காக் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து அனந்தபூர் வழியாக பல்லாரிக்கு வந்தனர். களைப்பாய் இருந்ததால், பல்லாரியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, நேற்று அதிகாலை 4:00 மணியளவில், செல்லகூர்கிக்கு சென்று கொண்டிருக்கும் போது, கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.இதில் இரண்டு மருத்துவர்கள், ஒரு வழக்கறிஞர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த டாக்டர் அமரகவுடா, துரிதமாக தனது மொபைல் போன் மூலம், மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இவர், பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.டாக்டர் கோவிந்தராஜுலு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் பிரபலமானவர். அவரது மரணத்திற்கு பிம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.