உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஷ்டத்துக்கு பேசினால் நடவடிக்கை அமைச்சர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை

இஷ்டத்துக்கு பேசினால் நடவடிக்கை அமைச்சர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை, மேலிடம் உன்னிப்பாக கவனிக்கிறது. எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மனம் போனபடி கருத்து கூறும் அமைச்சர்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளது.கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசில், சமீப நாட்களாக கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. முதல்வர் சித்தராமையா கோஷ்டி, துணை முதல்வர் சிவகுமார் கோஷ்டி, அமைச்சர்கள் கோஷ்டி என, பல கோஷ்டிகள் உருவாகியுள்ளன.அந்தந்த கோஷ்டியில் உள்ளவர்கள் முதல்வர் மாற்றம், மாநில காங்., தலைவர் மாற்றம், அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கின்றனர்.

எச்சரிக்கை

மேலிடம் முடிவு செய்ய வேண்டிய விஷயத்தை பற்றி, அமைச்சர்கள் பேச வேண்டாம் என, கட்சி மேலிடம் பல முறை எச்சரித்தும் அமைச்சர்கள் பொருட்படுத்தவில்லை. கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் அரசும், கட்சியும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின.எரிச்சல் அடைந்த மேலிடம், இனியும் வாயை திறந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மஞ்சுநாத் பண்டாரி மூலமாக, அமைச்சர்களை எச்சரித்துள்ளது.இது குறித்து, மஞ்சுநாத் பண்டாரி வெளியிட்ட அறிக்கை:கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறுவோர், காங்கிரசுக்கு கட்டுப்பட்ட சிப்பாய்கள் அல்ல என, மேலிடம் கூறியுள்ளது. மாநில தலைவர் மாற்றம், முதல்வர் மாற்றம், அமைச்சர்கள் என, மற்ற விஷயங்களை, மேலிட தலைவர்கள் முடிவு செய்வர். இது குறித்து எந்த அமைச்சர்களும் தேவையின்றி பேச கூடாது. ஆனால் பல அமைச்சர்கள் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர்.

அறிக்கை

தலைமை மாற்றம் குறித்து முடிவு செய்வது, மேலிடம் தானே தவிர. ஊடகங்கள் அல்ல. எந்த விஷயமாக இருந்தாலும், முதலில் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அதை விட்டுவிட்டு மனம் போனபடி கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் குறித்து, மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது.அது மட்டுமின்றி, அமைச்சர்களின் சாதனைகள் குறித்தும், மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது. அமைச்சர்கள் ஒன்றரை ஆண்டாக, அவரவர் துறையில் எப்படி பணியாற்றுகின்றனர், மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது, கட்சி அலுவலகத்துக்கு வந்தனரா; கட்சியை பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனரா; திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனரா என, அறிக்கை கேட்டுள்ளனர்.அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, மஹாதேவப்பா, திம்மாபுரா ஆகியோர் அவ்வப்போது வரம்பு மீறி பேசுகின்றனர். இதை மேலிடம் உன்னிப்பாக கவனிக்கிறது.கட்சி உத்தரவை மீறுவோர் மீது, வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக, மேலிடம் தெரிவித்துள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேச கூடாது என, என் மூலமாக அமைச்சர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி