முருடேஸ்வரா கடற்கரையில் சுற்றுலா பயணியருக்கு தடை
கார்வார்: முருடேஸ்வரா கடலில் மூழ்கி நான்கு மாணவியர் இறந்ததை அடுத்து, கடலில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் கடை வைத்துள்ள, உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கார்வார் பட்கல் அருகே முருடேஸ்வரா உள்ளது. இங்கு உள்ள சிவன் கோவில் உலக புகழ் பெற்றது. கோவிலையொட்டி கடற்கரையும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து உற்சாகம் அடைகின்றனர். நீர் விளையாட்டுகளும் உள்ளதால், சுற்றுலா பயணியர் வருகை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, கோலார் முல்பாகலில் இருந்து முருடேஸ்வராவுக்கு, பள்ளி மாணவ, மாணவியர் சுற்றுலா சென்றனர். கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி, நான்கு மாணவியர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பும், கடலில் மூழ்கி இருவர் இறந்தனர்.இதையடுத்து கடலில் குளிக்க, சுற்றுலா பயணியருக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என, உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடலுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணியரை நம்பி தான், கடற்கரையில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், துணிக்கடைகள் உள்ளன. மேலும் கடற்கரையை சுற்றி 350க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன.கடற்கரையில் இருந்து ரயில், பஸ் நிலையங்களுக்கு செல்ல ஆட்டோ, கார்களும் உள்ளன. சுற்றுலா பயணியர் கடலில் குளிக்க தடை விதித்தால், இங்கு யாரும் வர மாட்டார்கள். தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என, விடுதி உரிமையாளர் சந்தோஷ் நாயக் கூறினார்.இதுகுறித்து மாநில மீன்வள அமைச்சரும், உத்தர கன்னடா பொறுப்பு அமைச்சருமான மங்கள் வைத்யா கூறுகையில், ''முருடேஸ்வராவில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கவனமுடன் செயல்படும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். கடலில் உயிரிழப்புகள் நடந்தால் அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கூடுதல் உயிர் காக்கும் பணியாளர்களை நியமித்து, சுற்றுலா துறை மேற்பார்வையில் செயல்பட வேண்டும். நிலைமை கட்டுக்குள் வந்ததும், சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்,'' என்றார்.