விதிகளை மீறும் சொந்த வாகனங்கள் போக்குவரத்து கமிஷனர் எச்சரிக்கை
பெங்களூரு: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, வாடகை அடிப்படையில் பயணியரை அழைத்துச் செல்ல பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், அத்தகைய வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களின் உரிமையாளர்கள், அதிகமான வரி செலுத்த வேண்டும். இந்த வாகனங்கள், மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்டிருப்பது கட்டாயம். சொந்த பயன்பாட்டுக்கு வாகனம் வைத்துள்ளோருக்கு குறைவான வரி விதிக்கப்படுகிறது. இவர்களின் வாகன நம்பர் பிளேட் வெள்ளை நிறத்தில் இருக்கும். பாதிப்பு
அதிகமான வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், பலரும் சொந்த பயன்பாட்டுக்கு வாகனங்கள் வாங்கி, வாடகை அடிப்படையில் பயணியரை அழைத்துச் சென்று, வர்த்தக வாகனங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது.வர்த்தக வாகன உரிமையாளர்களும் நஷ்டம் அடைகின்றனர். இந்த வாகனங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இதுகுறித்து, பெங்களூரு டாக்சி ஓட்டுனர் யூனியன் தலைவர் அஸ்வத் கூறியதாவது: சொந்த பயன்பாட்டு வாகனங்களின் உரிமையாளர்கள், வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் சங்கங்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். பெங்களூரின் திரைப்பட வாகன ஓட்டுனர்கள் சங்கத்தில், ஐந்தாறு வாகனங்கள் மட்டுமே மஞ்சள் போர்டு வைத்துள்ளன. 75 டாச்சிகள் வெள்ளை நிற நம்பர் பிளேட்டில் இயங்குகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறையில் புகார் அளித்தும் பயன் இல்லை. துாண்டுதல்
சமீபத்தில் இதுபோன்று, விதிமீறலாக வாடகைக்கு இயங்கிய வாகனம் குறித்து போக்குவரத்து துறைக்கு தகவல் கொடுத்தேன். ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த வாகன ஓட்டுனர், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார். திரைப்பட வாகன ஓட்டுனர் சங்கத் தலைவரின் துாண்டுதலால், இதுபோன்று மிரட்டினார். வர்த்தக வாகனங்களை நம்பியுள்ள, எங்களை போன்றவர்களின் வயிற்றில் அடிக்கும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் யோகேஷ் கூறியதாவது:சொந்த வாகனங்களை, வாடகை அடிப்படையில் பயணியரை அழைத்துச் செல்லும் வர்த்தக வாகனமாக பயன்படுத்த கூடாது. பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது. இவர்கள் வாகனங்களை எங்கெங்கோ நிறுத்துகின்றனர்; ஓட்டுனரும் இருப்பது இல்லை. ஓட்டுனர் இருந்தாலும், வாடகைக்கு வந்துள்ளதை ஒப்புக்கொள்வது இல்லை. விதிமுறை
வர்த்தக வாகனங்கள் விஷயத்தில், புதிய விதிமுறை வகுக்கப்படும். அதை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த வாகனங்களை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்துவோருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். சட்டவிரோதமாக செயல்பட்டால், பர்மிட் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.