அரசு பள்ளியில் குக்கர் வெடித்து இருவர் காயம்
துமகூரு; துமகூரு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சமையல் செய்யும் போது குக்கர் வெடித்து சிதறியதில் சமையல் உதவியாளர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.துமகூரு மாவட்டம், மதுகிரியின் புறவராவில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி, நேற்று முன்தினம் மதியம் மாணவர்களுக்கு புலாவும், பாயசமும் கொடுக்க, சமையல் அறை உதவியாளர் உமாதேவி, 52, மற்றொரு ஊழியர் ஜெயம்மா, 55, பணியில் ஈடுபட்டிருந்தனர்.திடீரென குக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் இருவரையும் மதுகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவருக்கும் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்த உமாதேவியின் மகன் வேணுகோபால், கொடிகேஹள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.மகன் வேணுகோபால் கூறுகையில், ''என் தாயார், இப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணியாற்றுகிறார். சமையல் செய்யும் போது குக்கர் வெடித்துள்ளது. எந்தவிதமான பாதுகாப்பு சாதனங்களும் இல்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மருத்துவமனைக்கு பிளாக் கல்வி அதிகாரியும், பள்ளி ஊழியர்களும் வந்திருந்தனர். கல்வி அதிகாரி கூறுகையில், 'நாளை (இன்று) பள்ளிக்கு சென்று முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.