உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனாவுக்கு இருவர் பலி பாதிப்பு 562 ஆக உயர்வு

கொரோனாவுக்கு இருவர் பலி பாதிப்பு 562 ஆக உயர்வு

புதுடில்லி:டில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத குழந்தை உட்பட இருவர், நேற்று இறந்தனர். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 562 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது பரவி வரும் தொற்று வகை, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என டாக்டர்கள் கூறியுள்ளபோதும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்றயை நிலவரப்படி, நாடு முழுதும், 4,866 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில், 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக டில்லியில், 562 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத குழந்தை நேற்று இறந்தது. இந்த குழந்தைக்கு காய்ச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்கனவே இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, 87 வயது முதியவர் ஒருவரும் நேற்று இறந்தார். இவருக்கும் இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவை இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டில்லியில் உள்ள பெரிய மருத்துவனைகளில், இதற்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் கூறுகையில், 'சாதாரண காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு வாரத்துக்கு மேலாக இடைவிடாத காய்ச்சல், சளி, இருமல் இருந்தால், டாக்டர்கள் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து கொள்ளலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை