உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி இன்சூரன்ஸ் ஆவணம் தயாரித்து மோசடி! புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

போலி இன்சூரன்ஸ் ஆவணம் தயாரித்து மோசடி! புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

பாலக்காடு; லாரிக்கு போலி இன்சூரன்ஸ் தயாரித்து மோசடி செய்த, புதுக்கோட்டை சேர்ந்த இருவரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அருகே சூரியபாறையில், கடந்த, 2019ல் பைக் மீது லாரி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, போலி ஆவணம் தயாரித்து லாரி இன்சூரன்ஸ் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.இதையடுத்து, 'யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்' என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பாலக்காடு போலீசார், மாவட்ட எஸ்.பி., ஆனந்த் அறிவுரையின்படி, சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் மேற்பார்வையில், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில், இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்டது, தமிழகத்தில் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 49, கீரனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயின்லாவுதீன், 39, ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் நேற்று புதுக்கோட்டைக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் கூறியதாவது:விபத்து ஏற்படுத்திய லாரி புதுக்கோட்டையை சேர்ந்த வியாபாரிக்கு சொந்தமானது. அதிக வாகனங்கள் வைத்திருக்கும் வியாபாரி, வாகனங்களின் ஆவணங்கள் இன்சூரன்ஸ், பர்மிட் உள்ளிட்ட விஷயங்களை கையாளும் பொறுப்பை தனியார் ஏஜென்சி வசம் ஒப்படைத்திருந்தார், அந்த ஏஜென்சியின் இடைத்தரகர்களான செந்தில்குமார், ஜெயின்லாவுதீன் இருவரும், வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது, பிரீமிய தொகையை குறைத்து கொடுக்கிறோம் எனக்கூறி, வியாபாரியை நம்ப வைத்துள்ளனர்.இந்நிலையில், 'புல் கவரேஜ்' இன்சூரன்ஸ் செய்வதற்கான தொகையில், பாதி பணத்தை பெற்றுக்கொண்டு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, வியாபாரியிடம் வழங்கி ஏமாற்றியுள்ளனர்.அந்த போலி ஆவணத்தை, விபத்து வழக்குக்காக நீதிமன்றத்தில் தாக்கால் செய்த போது தான், இந்த குற்றச்செயல் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபற்றி, இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.இதேபோன்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் தயாரித்து கொடுத்து மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை