காஷ்மீரில் தொடரும் ஆப்பரேஷன் அகல் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம்
குல்காம்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவம் அதிரடியாக இறங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள அகல் என்ற வனப்பகுதியில் அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, கடந்த 1ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, 'ஆப்பரேஷன் அகல்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை துவங்கியது. நம் வீரர்கள் அந்தப்பகுதியை சுற்றி வளைத்தனர். 'ட்ரோன்'கள், ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி தேடுதல் வேட்டை நடத்தியபோது சிலர் சிக்கினர். அவர்கள் அளித்த தகவலின்படி, குல்காம் மலைப்பகுதியிலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நே ற்று முன்தினம் இரவு முழுதும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ந டந்தது. இதில் பிரித்பால் சிங், ஹர்மிந்தர் சிங் என்ற இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 'வீரர்களின் உச்சபட்ச தியாகத்தை சினார் கார்ப்ஸ் மதிக்கிறது. அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்' என, ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது. நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை ஒன்பதாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.