பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை: ஜம்மு - காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் ஊடுருவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பாரமுல்லா மாவட்டம் பானிபோராவில் உள்ள சோபோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் நீடித்தது. இதன் முடிவில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
பாதுகாவலர்கள் கொலை: மக்கள் போராட்டம்
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பாதுகாவலர்கள் நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் இருவரையும் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்துக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'காஷ்மீர் டைகர்ஸ்' பொறுப்பேற்றுள்ளது. இருவரையும் சுட்டுக் கொன்றது தொடர்பான புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டது. இதையடுத்து, பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, கிஷ்த்வார் மாவட்டத்தில் சனாதன் தர்ம சபா நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது. திராப்ஷாலா பகுதியில் திரண்ட 100க்கும் மேற்பட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்டம் முழுதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.