உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

ரூப்நகர்:பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகள், வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்தன. படகு பயணம் ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் எல்.முருகன் பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார். ஷாபூர் பேலா, ஹரிவால், பானு பாலி, பேலா தியானி மற்றும் நங்கல் உட்பட பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் டிராக்டர் மற்றும் படகில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றார். வயல்களில் நாசம் அடைந்த சோளம் மற்றும் நெற் பயிர்களை பார்வையிட்டார். நீர்ப்பாசனக் கால்வாய்கள் அடைபட்டு, முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் கிடைக்காமல் தவிப்பதாகவும் மக்கள் கூறினர். நடவடிக்கை கிராம மக்களிடையே அமைச்சர் முருகன் பேசியதாவது: மத்திய அரசு உங்களுடன் நிற்கிறது. நிவாரணப் பணிகள் எந்தத் தடையும் இல்லாமல், உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து விரைவுபடுத்தப்படும். விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்ப மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். எதிர்காலத்தில் பேரிடர் காலத்தில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க கிராமங்களை பிரதான சாலைகளுடன் இணைக்க பாலம் கட்டுவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களைத் தடுக்க உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீண் டகால தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு 1,600 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே அறிவித்துள்ளார் . பிரதமரின் வழிகாட்டுதல்படி, உயர்நிலைக் குழுக்கள் வெள்ள நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருகின்றன. இந்த சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, ரூப்நகர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் முருகன் ஆலோசனை நடத்தினார். நிவாரண நடவடிக்கை, மருத்துவ உதவி, நிவாரணப் பொருட்கள் வினியோகம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி