உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரேத பரிசோதனையை 4 மணி நேரத்தில் முடிக்க உ.பி., அரசு உத்தரவு

பிரேத பரிசோதனையை 4 மணி நேரத்தில் முடிக்க உ.பி., அரசு உத்தரவு

லக்னோ : உத்தர பிரதேசத்தில், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் உடல் எடுத்து வரப்பட்ட நான்கு மணி நேரங்களுக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உ.பி.,யில் அனைத்து பிரேத பரிசோதனை மையங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

மருத்துவமனைக்கு உடல் எடுத்து வரப்பட்ட பின், நான்கு மணி நேரங்களுக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ள மாவட்டங்களில், இந்த செயல்முறையை சரியான நேரத்தில் முடிக்க பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதை, அந்தந்த தலைமை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.அன்புக்குரியவர்களை இழந்த துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர், உடல்களுக்காக இனி நீண்ட நேரம் காத்திருக்கக் கூடாது. அவர்களின் துன்பத்தை குறைப்பதே இந்த புதிய வழிகாட்டுதல்களின் நோக்கம்.வழக்கமாக, கொலை, தற்கொலை, பாலியல் குற்றங்கள் போன்ற வழக்குகளில், சூரிய அஸ்தமனத்துக்கு பின், பிரேத பரிசோதனை நடக்காது. இனி, மாவட்ட கலெக்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன், இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்.ஒவ்வொரு பிரேத பரிசோதனை மையத்திலும் தலைமை மருத்துவ அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஒரு கணினி ஆப்பரேட்டர் மற்றும் 'டேட்டா என்ட்ரி' ஆப்பரேட்டர்கள் இருவர் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் இருந்து பிரேத பரிசோதனை மையங்களுக்கு உடல்களை எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக இரண்டு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை அல்லது திருமணமான 10 ஆண்டுகளுக்குள் பெண்ணின் மரணம் தொடர்பான வழக்குகளில், பிரேத பரிசோதனை குழுவில், குறைந்தது ஒரு பெண் டாக்டர் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை