ரபேலுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்த சீனா: அமெரிக்கா அறிக்கையில் அம்பலம்
வாஷிங்டன்: கடந்த மே மாதம் இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு ரபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனா பொய் தகவலை பரப்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயன்ற காரணத்தினால் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் விமானப்படைதளம் மீது நமது விமானப்படை தாக்குதல் நடத்தின. இதனையடுத்து போரை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சியது. இதனை இந்தியா ஏற்க மோதல் முடிவுக்கு வந்தது. அப்போது, இந்திய விமானப்படையிடம் இருந்த ரபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. சமூக ஊடகங்களிலும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், இதனை இந்தியா நிராகரித்துவிட்டது.இந்நிலையில் அமெரிக்கா- சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தொடர்ந்து, ரபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுப்பதற்காக சீனா பொய்ப் பிரசாரம் மேற்கொண்டது. அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஜே 35 எஸ் விமானங்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலி படங்கள் உதவியுடன் ரபேல் போர் விமானங்களுக்கு எதிராக பொய் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியது. அதில், சீன ஆயுதங்கள் அழித்தவற்றின் உதிரி பாகங்கள் எனக்கூறப்பட்டன. ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தோனேஷியா தயாராக இருந்த போதும், அதனை நிறுத்திவிட்டு தங்களது விமானங்களை வாங்கும்படி அந்நாட்டை சீனா வலியுறுத்தியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.