வாக்காளர்களை கவர போட்டி போட்டு உத்தர பிரதேச தலைவர்கள் பிரசாரம்: சூடுபிடித்த தேர்தல் களம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் உத்தர பிரதேச தலைவர்களும் களத்தை ஆக்கிரமித்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புது உத்வேகம் பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும், 6, 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், எம்.பி.,யான பிரியங்கா போன்ற தேசியத் தலைவர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில், பீஹாரில் வசிக்கும் ஹிந்தி மொழி பேசும் மக்களிடையே கவனம் ஈர்க்க, உ.பி., தலைவர்களை போட்டிப்போட்டு பா.ஜ., மற்றும் காங்., கூட்டணி கட்சியினர் களமிறக்கி உள்ளனர். தே.ஜ., கூட்டணி சார்பில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொள்ள களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், பீஹாரின் சிவான், கோபால்கஞ்ச், மேற்கு சாம்பரான், தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து அரசியல் ஆய்வாளர் மனோஜ் பத்ரா கூறுகையில், “தீவிர ஹிந்துத்வா கொள்கை உடையவர் யோகி ஆதித்யநாத். ''தன் மாநில எல்லையை ஒட்டியுள்ள பீஹார் மாவட்டங்களில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. 'இதுதவிர எளிய மக்களை கவரும் வகையில் இவரது பேச்சு அமைந்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பிரசாரம், பா.ஜ.,வினருக்கு புது உத்வேகத்தை அளிக்கக்கூடியதுடன், ஓட்டுகளாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார். மறுபுறம், மஹாகட்பந்தன் கூட்டணியை ஆதரித்து, உ.பி.,யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் பிரசாரம் செய்கிறார். நேற்று முன்தினம் தன் பிரசாரத்தை துவக்கிய இவர், நாளை மறுநாள் வரை பீஹாரின் பூர்னியா, மதுபனி, தர்பங்கா, சமஸ்திபூர், சரண், கிழக்கு சாம்பரான், சிவான், கைமூர், ரோஹ்தாஸ், அவுரங்காபாத், கயா ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. கூடுதல் கவனம் இதுகுறித்து மற்றொரு அரசியல் ஆய்வாளரான ராஜேந்திர குமார் கூறுகையில், “பிற்போக்கு, தலித் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் வகையில் அகிலேஷ் யாதவின் செயல்பாடு உள்ளது. ''ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவுடன் ஒரே மேடையில் பங்கேற்று, எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ''இது, தேசிய அளவில் காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணியை வலுப் படுத்த உதவும்,” என்றார். உ.பி., தலைவர்களின் பீஹார் வருகை, இரு மாநிலங்களுக்கு இடையேயான கலாசார மற்றும் அரசியல் தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக இரு மாநிலங்களிலும் யாதவர்கள், குர்மிகள் மற்றும் குஷ்வாஹா போன்ற சமூகத்தினர் வசிக்கின்றனர். எனவே, பீஹார் தேர்தலில் உ.பி., தலைவர்களின் பிரசாரம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. யோகி ஆதித்யநாத், அகிலேஷ் ஆகியோரின் பிரசாரங்கள் உ.பி.,யின் கள அரசியலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும், ஹிந்துத்வாவுக்கும், சமூக நீதி அரசியலுக்கும் இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.