உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தவர் சத்ய சாய்பாபா துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

 சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தவர் சத்ய சாய்பாபா துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

புட்டபர்த்தி: “பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், கடந்த 13ம் தேதி துவங்கி கோலாகலமாக நடந்தது. சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், தங்கத் தேரோட்ட பவனி நடைபெற்றன. இந்த விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கையும், அர்ப்பணிப்பும் உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களை சேவையாற்றுவதற்கு ஊக்குவித்து வருகிறது. உலகம் முழுதும் நிலவும் நிச்சயமற்ற தன்மை, மோதல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில், பாபாவின் போதனைகள் தான், மனித குலத்துக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளன. 'அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே' என்பதை கொள்கையாக கொண்டு வாழ்ந்த பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, இதையே அனைவருக்கும் கற்பித்தார். கடவுளின் சிறந்த துாதராக விளங்கிய ஸ்ரீ சத்ய சாய்பாபா, அமைதி, அன்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளமாகவும் திகழ்ந்ததுடன், காலத்தால் அழியாத நிலையையும் அடைந்துள்ளார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை, பாபாவின் நற்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு செல்கிறது. தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்ற ஒரே துறவி இவர்தான். அன்புக்கும், பாசத்திற்கும் கொள்கைகள் இல்லை என்பதை இது காட்டுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக என்.டி.ராமராவ், - எம்.ஜி.ஆர்., ஆகியோர் ஆந்திரா, தமிழக முதல்வர்களாக இருந்தபோது தெலுங்கு கங்கை திட்டம் துவங்கப்பட்டது. அந்த திட்டத்தை மறு உருவாக்கம் செய்து மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா முன்னின்று, உதவியும் ஆசியும் வழங்கினார். இதன் காரணமாக, சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது; ஆந்திரா, தமிழக மக்களிடையே நல்லுறவு நீடிக்கவும் இந்த உதவியே காரணம். இவ்வாறு அவர் பேசினார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரிபுரா கவர்னர் இந்திரசேனா ரெட்டி, தமிழக அமைச்சர் சேகர்பாபு, சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் வாழ்த்து பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து கடிதத்தை, புட்டபர்த்தியில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர் சேகர்பாபு, சத்யசாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலர் ரத்னாகரிடம் வழங்கினார். கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் கருணை மற்றும் சேவை மனப்பான்மை, பல துறைகளில் நீடித்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித நலன் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்ற நம்பிக்கையில், சத்ய சாய்பாபாவின் பணி அமைந்திருந்தது; உண்மையான சேவை என்பது, செயலில் வெளிப்படுத்தப்படும் இரக்கத்தின் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கியதில், பாபாவின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக உள்ளது. கிருஷ்ணா நதி நீரை, தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டத்தை வலுப்படுத்துவதில் அவரது அறக்கட்டளை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி