விஜயநகரா: உலக பிரசித்தி பெற்ற ஹம்பி விருபாக்ஷேஸ்வரா கோவிலில், உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.விஜயநகரா, ஹொஸ்பேட்டின் ஹம்பி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்குள்ள விருபாக்ஷேஸ்வரா கோவில், வரலாறு மற்றும் புராண பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணியரில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம்.வெளிநாட்டு சுற்றுலா பயணியர் பலரும், ஜீன்ஸ், டீ-சர்ட் என அணிந்து வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். விருபாக்ஷேஸ்வரா கோவிலின் புனிதத்தை களங்கமாக்குகின்றனர். பக்தர்களின் மனதை புண்படுத்துகின்றனர். இதைத்தடுக்க, உடை கட்டுப்பாடு விதிக்கும்படி வலியுறுத்தினர்.இதை ஏற்றுக்கொண்ட, விஜயநகரா மாவட்ட நிர்வாகம், உடை கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.இதுகுறித்த அறிக்கை:ஹம்பி விருபாக்ஷேஸ்வரா கோவிலில், உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி கோவிலுக்கு வருவோர், பர்முடா, ஜீன்ஸ், நிக்கர் அணிந்து வரக்கூடாது. ஆண்கள் வேட்டி, சட்டையும்; பெண்கள் சேலை, சுடிதார் என சம்பிரதாய உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும்.கோவிலிலேயே உடைகள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வேறு உடை அணிந்து வந்தவர்கள், கோவிலில் சம்பிரதாய உடைகள் வழங்கப்படும். இதை அணிந்து கொண்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். கடவுளை தரிசித்த பின், உடைகளை திருப்பிக் கொடுத்து, தங்களின் உடைகளை அணிந்து கொள்ளலாம்.கோவிலுக்கு வரும்போது, பக்தி உணர்வுடன் கடவுளை தரிசிக்க வேண்டும். வேறு விதமான உடைகள் அணிந்து, ஆன்மிக உணர்வை புண்படுத்தக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், உடை கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.