வக்பு வாரியத்தில் நோட்டீஸ் அனுப்பவில்லை: பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
பெங்களூரு ; ''பா.ஜ., ஆட்சியில் வக்பு வாரியத்தில் இருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. பழைய வீடியோவை வெளியிட்டு, அமைச்சர் ஜமீர் அகமது கான் பொய் பிரசாரம் செய்கிறார்,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ஜ., ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது, வக்பு வாரிய கூட்டம் நடத்தவில்லை. வக்பு வாரிய கட்டட திறப்பு விழாவில், அன்வர் மணிப்பாடி அறிக்கையின்படி, வக்பு சொத்தை கைப்பற்றிய காங்கிரஸ் தலைவரிடம் இருந்து, வக்பு சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியதை, திரித்து அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.விவசாயிகளின் நிலத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவோ, நிலத்தில் திருத்தம் செய்யவோ சொல்லவில்லை. தற்போது அமைச்சர் ஜமீர் அகமது கான், 'விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கும் முன், காங்கிரஸ் தலைவர்கள் எங்கெல்லாம் வக்பு வாரிய சொத்துகளை அபகரித்தனரோ, அவற்றை உடனடியாக மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் சித்தராமையாவோ, 'விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும்' என கூறியுள்ளார். இந்த வாக்குறுதிகள் தேர்தல் முடிந்ததும், மீண்டும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. விவசாயிகள் மீது முதல்வருக்கு அக்கறை, மரியாதை இருந்தால், வக்பு வாரியத்தின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்