கன்னடர் -- தமிழர் மாநாட்டில் பங்கேற்க வாரீர்: தங்கவயல் தமிழ்ச் சங்கம் அழைப்பு
தங்கவயல்: ''கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாட்டுக்கு தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் ஒன்று கூடுவோம்,'' என, தங்கவயல் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன், செயல் தலைவர் கமல் முனிசாமி, துணைத் தலைவர் தீபம் சுப்பிரமணியம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது தமிழரே. சிறுபான்மை நலத்துறையில், மொழி சிறுபான்மையினரான தமிழர் வளர்ச்சி குறித்து, அரசு இதுவரை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.கர்நாடக தமிழர்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டவர்கள். பரந்து விரிந்த கர்நாடகாவில், தமிழர் இல்லாத இடமே இல்லை. இத்தகைய தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாக உள்ளது.மொழிவாரி மாநிலமாக பிரிந்தபோது தான், பாரம்பரிய தமிழர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக சிலர் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் கர்நாடக மாநில வளர்ச்சியில், தமிழர் பங்கு அனைத்திலும் உள்ளதை சிலர் நினைப்பதில்லை.கன்னடர் --- தமிழர் ஒருதாய் மக்கள் என்பதை தமிழர்கள் சொல்ல தவறுவதில்லை. ஆனால், பெரும்பான்மையினர் என்ற முகவரியை பெற்ற ஒரு சிலர் மட்டுமே, தப்புக்கணக்கு போடுகின்றனர்.கர்நாடக தமிழர்கள் ஒன்று கூடும், ஒரு உன்னதமிக்க நிகழ்வாக இம்மாதம் 20 ம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் தமிழர் நலத்தையும், பலத்தையும் காட்ட தவறாமல் பங்கேற்க வேண்டும். இது நம்மின் உணர்வை வெளிப்படுத்தும் நன்னாளாக அமையட்டும்.தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில், தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு களம் இறங்கியுள்ள தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமாரின் சீரிய பணியை பாராட்டி வரவேற்கிறோம்.கன்னடர் - தமிழர் ஒற்றுமையின் அடையாளத்தை காட்டுகிற இம்மாநாடு வெற்றிப்பெற வேண்டும். தமிழர் நல உரிமைகளுக்கு சங்கநாதம் ஊதுவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.