பெண் இறப்புக்கு இட்லி காரணமா?
விஜயநகரா: விஜயநகரா, ஹொஸ்பேட்டில் வசித்த ஐஸ்வர்யா, 22, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர், ஹொஸ்பேட் தாய், சேய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 20ம் தேதி அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது.பிரசவம் நடந்த நான்கு நாட்கள், ஐஸ்வர்யா நன்றாக இருந்தார். நான்காம் நாள் அவருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக, கொப்பால் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.சிகிச்சை பலன் அளிக்காமல், டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை டாக்டர்கள் மறுக்கின்றனர். ஹொஸ்பேட் தாய், சேய் மருத்துவமனையில், ஐஸ்வர்யாவை தவிர, வேறு எந்த பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.அவருக்கு வெளியே இருந்து, குடும்பத்தினர் இட்லி வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட பின்னரே, அவருக்கு 'புட் பாய்சன்' ஆகி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட துவங்கியது. அவரது இறப்புக்கு இட்லியே காரணமாக இருக்கும் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.இதை தீவிரமாக கருதிய சுகாதார அதிகாரிகள், ஐஸ்வர்யாவுக்கு இட்லியை எங்கிருந்து வாங்கி கொடுத்தனர் என்பது குறித்து, விசாரணையில் இறங்கி உள்ளனர்.