புதுடில்லி : ''பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் யாரும் இனி சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய முடியாது; அதற்காகவே, பதவி பறிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீஹார் சென்றார். உற்சாக வரவேற்பு
திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற அவருக்கு, வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8qpyko0r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கயாவில் நடந்த நிகழ்ச்சியில், மின்சாரம், சாலை, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில், 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: புனித பூமியான பீஹாரில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும், நாட்டின் மிகப்பெரிய பலமாக உள்ளது. ஒருபோதும் அது வீண் போகாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, 'பயங்கரவாதிகளை துாள் துாளாக்குவேன்' என, இந்த மண்ணில் இருந்து சபதம் செய்தேன். அது நிறைவேற்றப்பட்டது. பீஹார் மக்களை ராஷ்ட்ரீய ஜனதா தளம் தங்கள் ஓட்டு வங்கியாக மட்டும் கருதுகிறது; அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. அக்கட்சியின் ஆட்சியில், கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கின. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உட்பட எதுவும் இங்குள்ள மக்களுக்கு தரப்படவில்லை. பல தலைமுறை இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பீஹாரில் எந்த பெரிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அக்கட்சியினர் ஒருபோதும் மக்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பதில்லை; தங்கள் பைகளை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தினர். பீஹார் மக்களை தன் மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டேன் என காங்கிரஸ் முதல்வர் ஒருவர் கூறியிருந்தார். இங்குள்ள மக்கள் மீது காங்கிரஸ் கொண்ட வெறுப்பை யாராலும் மறக்க முடியாது. இந்த விவகாரத்தை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பீஹார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெறவும், அவர்களுக்கு மரியாதை தரவும், தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள திட்டங்கள், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்கள்.
ஓர் அரசு ஊழியர், 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே வேலை இழப்பார். ஆனால், முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதமர் கூட சிறையில் இருந்தபடியே நிர்வாகம் செய்ய முடியும். சில நாட்களுக்கு முன், முதல்வர் ஒருவர், சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டது, உத்தரவுகளை பிறப்பித்தது போன்ற நிகழ்வுகள் நடந்தன. தலைவர்களுக்கு அத்தகைய சலுகை இருந்தால், ஊழலை எவ்வாறு எதிர்த்து போராட முடியும்? அதனால் தான், ஊழலுக்கு எதிரான பதவி பறிப்பு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரம்பிற்குள் பிரதமரும் வருகிறார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
எதிர்ப்பு
கடுமையான குற்றச்சாட்டில், 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். இதன் வாயிலாக, யாரும் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது. யாரும் சிறையில் இருந்தபடி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. இந்த மசோதாவுக்கு, ஊழல் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பீஹாரை தொடர்ந்து, மேற்கு வங்கம் சென்ற பிரதமர், அங்கு 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை உள்கட்டமைப்பு வசதி களுக்கு அடிக்கல் நாட்டினார்; பின், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ண வழித்தடங்களில், 'மெட்ரோ' ரயில் சேவையை துவக்கி வைத்தார். ஜெசோர் சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து, ஜெய்ஹிந்த் பிமன்பந்தர் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணித்தார். பிரதமர் வந்தது ஏன்? பிரதமர் பீஹார் வருகையை, மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார். புனித தலமாக கருதப்படும் கயாவில், முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்து தர்ப்பணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இங்கு, நலத் திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் வந்த நிலையில், லாலு தன் சமூக வலைதளத்தில், 'நிதிஷ் குமார் மற்றும் அவரின் கட்சிக்கு பிண்ட தானம் செய்ய பிரதமர் கயா வந்துள்ளார்' என, தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தந்த பா.ஜ., 'கயாவில் தேஜஸ்வி யாதவின் அரசியலுக்கு முடிவு கட்டவே பிரதமர் வந்துள்ளார். இத்துடன் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரும்' என குறிப்பிட்டுள்ளது. ஆசியாவின் அகலமான ஆறு வழி பாலம் திறப்பு ஆசியாவின் மிக அகலமான அவுன்டா - சிமாரியா கேபிள் பாலத்தை, பிரதமர் மோடி நேற்று பீஹாரில் திறந்து வைத்தார். 1.86 கி.மீ., நீளமும், 112 அடி அகலமும் உள்ள இந்த ஆறு வழி பாலம், தேசிய நெடுஞ்சாலை 31ல், கங்கை நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. பீஹாரின் மொகாமாவின் அவுன்டா காட்டை, பெகுசாராயின் சிமாரியாவுடன் இந்த பாலம் இணைக்கிறது. இந்த புதிய பாலம் வாயிலாக, கனரக வாகனங்களின் பயண துாரம் 100 கி.மீ., மிச்சப்படும். இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். 'இந்த பாலம், பொறியியல் சாதனையின் அடையாளமாக மட்டுமல்லாமல், பீஹாருக்கு விரைவான வளர்ச்சி மற்றும் இணைப்புக்கான வாக்குறுதியாகவும் நிற்கிறது' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார். பக்ஸாரில் 6,880 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 660 மெகாவாட் அனல் மின் நிலையம் உட்பட பல முக்கிய மேம்பாட்டு திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார். கயா - டில்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், வடக்கு பீஹாரில் உள்ள வைசாலி - ஜார்க்கண்டின் கோடெர்மாவுடன் இணைக்கும் புத்த சர்க்யூட் ரயில் ஆகியவற்றையும் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.