| ADDED : டிச 25, 2025 01:24 AM
மும்பை: 'தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்க வேண்டுமெனில், அவர் நாடு திரும்ப வேண்டும்' என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த, 2019ல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும், தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும், இரு மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அங்கத் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'தப்பியோடிய பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதுடன் பொது இடங்களில் நடக்கும் கொண்டாட்டங்களில் ஈடு படுகின்றனர். இது இந்திய சட்டத்தை கேலிகூத்தாக்கும் செயல். இந்தியாவில் விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் நபர்கள் வெளிநாடுகளில் இருந்து தாக்கல் செய்யும் மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என, வாதிட்டார். அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் 'ஒரு சட்டத்தின் செல்லுபடிக்கு எதிராக வழக்கு தொடர்பவர் நாட்டில் இருக்க வேண்டும் என கட்டாயமில்லை. அவரது நிதி பொறுப்பு ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. 14,000 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; வங்கிகள் 6,000 கோடி ரூபாய் கடனை மீட்டுள்ளன' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது: மல்லையா நாடு திரும்பி அவர் மீதான குற்றவியல் வழக்குகளை எதிர் கொள்ளாதபோது, சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை எப்படி விசாரிக்க முடியும். இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க முடியாது. இரண்டில் எதை தொடர்வது என்று முடிவு செய்யுங்கள். வழக்கு பிப்., 2க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.