கோல்கட்டா,: ''மத்திய அரசின் திட்டமான நுாறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய மேற்கு வங்க தொழிலாளர்கள், 21 லட்சம் பேருக்கு வரும் 21ம் தேதிக்குள் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. போராட்டம்
இங்கு, மத்திய அரசின் திட்டங்களுக்கான 7,000 கோடி ரூபாயை இதுவரை ஒதுக்கவில்லை என, முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்கக்கோரி, கோல்கட்டாவில் நேற்று முன்தினம் 48 மணி நேர தர்ணாவை முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு நேரத்திலும் முதல்வர் மம்தா, கட்சி நிர்வாகிகளுடன் தன் போராட்டத்தை தொடர்ந்தார். நேற்று காலை, தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே வழக்கம்போல் தன் நடைப்பயிற்சியை மேற்கொண்டார். மேற்கு வங்க சட்டசபையில் நாளை, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், தன் தர்ணாவை முதல்வர் மம்தா இன்றுடன் நிறைவு செய்ய உள்ளார்.இதற்கிடையே அவர் நேற்று கூறியதாவது:மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு முறையாக வழங்கவில்லை. இதனால் மேற்கு வங்க மக்களை பட்டினியால் சாகடிக்கலாம் என மத்திய அரசு எண்ணுகிறது.அந்த எண்ணத்தை, நாங்கள் வெற்றி பெற விட மாட்டோம். என் மீது மேற்கு வங்க மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்.இதற்காக, மத்தியில் ஆளும் பா.ஜ.,விடம் கையேந்த மாட்டோம். அவர்கள் அளிக்கும் நிதிக்காகவும் இனி காத்திருக்க போவது இல்லை. நடவடிக்கை
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனப்படும் நுாறு நாள் வேலைத்திட்டத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, மேற்கு வங்கத்தில் உள்ள 21 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து எங்கள் அரசு, வரும் 21ம் தேதிக்குள் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தும். இது, எங்கள் அரசின் முதற்படி. வரும் நாட்களில், படிப்படியாக மத்திய அரசின் மற்ற திட்டங்களில் உள்ள நிலுவைத் தொகையையும் மாநில அரசே வழங்க நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.