உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வலை வளை: நவ. 25

வலை வளை: நவ. 25

மறைந்த வீரரின் மகளுக்கு திருமணம் நடத்தியது ராணுவம் ராஜஸ்தானின் ஆல்வாரில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மணமகளின் தந்தை ஹவில்தார் பப்பல் சிங் ராணுவத்தின் 16-வது ஜாட் படைப்பிரிவில் பணியாற்றியவர்; பணிக்காலத்தில் அவர் இறந்து விட்டார். அவரது மகளான பிரீத்தியின் திருமணத்தில் தான் ராணுவ வீரர்கள் இத்தனை பேர் பங்கேற்றனர். தந்தையின் இடத்தில் இருந்து ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் முன்னின்று திருமணத்தை நடத்தினர். திருமணச் செலவுக்கு 1.61 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினர். பப்பல் சிங்கின் மனைவி அனிதா தேவிக்கு, மரியாதையின் அடையாளமாகச் சால்வை அணிவிக்கப்பட்டது. திருமணம் முடிந்து ப்ரீத்தியின் விடைபெறும் நிகழ்ச்சியிலும் ராணுவ வீரர்கள் பங்கேற்று, தந்தையின் இடத்தை நிரப்பினர். சேலை, நகை அணிந்து ‘துபாய் ரன்’ ஓடிய கஞ்சனா துபாயில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகளில், சேலையும் பாரம்பரிய நகைகளும் அணிந்து பங்கேற்ற இந்தியப் பெண் கஞ்சனாவின் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் கஞ்சனா, ‘துபாய் ரைடு 2026’ல் சைக்கிள் ஓட்டியதையும், ‘துபாய் ரன்’ போட்டியில் பங்கேற்றதையும் பகிர்ந்தார். ‘நாள்தோறும் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் செல்லும் ஷேக் சாயித் சாலையில், சேலையுடன் சைக்கிள் ஓட்டியதை மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் கஞ்சனா. அமீரகத்தைத் தன் இரண்டாவது வீடு என்று குறிப்பிடும் அவர், சேலை அணிந்து ஓடிய தன் ஓட்டத்தை அமீரகத்தின் 55வது தேசிய தினத்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். புதிர் விடுவித்த நீனாவுக்கு ‘டைம்’ இதழ் அங்கீகாரம் கொல்கட்டா இந்தியப் புள்ளியியல் நிறுவனப் பேராசிரியரும் கணிதவியலாளருமான நீனா குப்தா, ‘டைம்100 நெக்ஸ்ட் இந்தியா 2026’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர், 1949-ல் ஆஸ்கர் ஜரிஸ்கி எழுப்பிய, பல ஆண்டுகளாக ஆய்வாளர்களைத் திணறடித்த கணிதத்தின் புதிர் போன்ற ஒரு வடிவத்துக்கு, 2014-ல் தீர்வு கண்டவர்; அதன் மூலம் அவருக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. ‘இது சமீப ஆண்டுகளின் மிகச் சிறந்த இயற்கணித வடிவியல் பணிகளில் ஒன்று’ என இந்திய தேசிய அறிவியல் அகாடமி நீனாவை பாராட்டியது. அவர் 2019-ல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, 2021-ல் ராமானுஜன் பரிசு, 2022-ல் நாரி சக்தி புரஸ்கார், 2024-ல் இன்போசிஸ் பரிசு பெற்றவர். இல்லாத படுக்கையை ஒதுக்கியது எப்படி? வாராணசி சிட்டி– -கோரக்பூர் ரயிலில் பயணித்த இஷான் பாஜ்பாய்க்கு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டில் ஏ1 பெட்டியின் 54-ம் எண் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பெட்டியில் இருந்ததோ 52 படுக்கைகள் மட்டுமே. இதனால் இரவுப் பயணத்துக்கு இருக்கையின்றித் தவித்தார். இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைதளத்தில் பகிர்ந்த அவர், ரயில்வே உதவி எண் 139-ல் புகார் அளித்தார். டிக்கெட் உறுதிப்படுத்தல் ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டார். ‘இல்லாத படுக்கையை எப்படி ரயில்வே ஒதுக்கியது’ என்று இணையவாசிகள் கேலியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எம்எல்ஏ., மகள் திருமணம் பீஹாரில் அமர்க்களம் பீஹார் எம்.எல்.ஏ., ஆனந்த் சிங்கின் மகள் திருமணம், ஆடம்பர ஏற்பாடுகளால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பாட்னா மாவட்டம் லட்மா கிராமத்தில் இன்று நடைபெறும் திருமணத்திற்காக, 100 அடி நீள பிரமாண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்காக 50 லட்சம் குலாப் ஜாமூன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 10,000 கிலோ கொள்ளளவு கொண்ட டேங்கர்களில் பால் கொண்டுவரப்படுகிறது. வி.ஐ.பி.,க்களுக்காக ஹெலிபேட், குதிரைப்பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளன. பந்தயத்தில் வெல்பவருக்கு, ‘மஹிந்திரா தார்’ ஜீப் பரிசாக வழங்கப்பட உள்ளது. விழாவில், 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ஆனந்த் சிங் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஆனந்த் சிங், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ