உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்படிப்பட்ட நீதிபதி நீங்கள்? இண்டி கூட்டணியின் வேட்பாளருக்கு பா.ஜ., கேள்வி

எப்படிப்பட்ட நீதிபதி நீங்கள்? இண்டி கூட்டணியின் வேட்பாளருக்கு பா.ஜ., கேள்வி

பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை, 'இண்டி' கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி சந்தித்த நிலையில், 'எப்படிப்பட்ட நீதிபதி நீங்கள்?' என, அவருக்கு பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது. துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், 74, கடந்த ஜூலை இறுதியில் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய, இன்று தேர்தல் நடக்கிறது. இதில், மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர். லோக்சபா, ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி. எனினும், அவருக்கு நெருக்கடி கொடுக்க, வேட்பாளரை இண்டி கூட்டணி நிறுத்தி உள்ளது. அக்கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, அனைத்து கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அந்த வகையில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவை, பாட்னாவில் சமீபத்தில் சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்தார்.

இந்த சந்திப்பு குறித்து, லோக்சபா பா.ஜ., - எம்.பி., ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஜாமினில் வெளியில் உள்ள லாலு பிரசாத் யாதவை, இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி சந்தித்துள்ளார். எப்படிப்பட்ட நீதிபதி அவர்? ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நபரை எப்படி சந்திக்கலாம்? இது பாசாங்குத்தனம். தயவு செய்து நாட்டின் ஆன்மா பற்றி அவர் பேச வேண்டாம்; அவரது போலி முகம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார். தேர்தலை புறக்கணிக்க பட்நாயக், ராவ் முடிவு துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, ஒடிஷாவின் பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. தே.ஜ., மற்றும் இண்டி கூட்டணிகளை ஒரே மாதிரியாக கருதுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. லோக்சபாவில் பிஜு ஜனதா தளத்துக்கு ஒரு எம்.பி., கூட இல்லை. அதே சமயம், ராஜ்யசபாவில், ஏழு எம்.பி.,க்கள் உள்ளனர். இதே போல், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. 'நோட்டா இருந்திருந்தால் அதற்கு ஓட்டளிப்போம். அது இல்லாததால் புறக்கணிக்கிறோம்' என அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதிக்கு, ராஜ்யசபாவில் மூன்று எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர்; லோக்சபாவில் எம்.பி., இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை