புதுடில்லி, ''என் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதில் என்ன தப்பு உள்ளது. மாநில முதல்வர்களும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் சந்தித்து கொள்வது போலவே இந்த சந்திப்பையும் பார்க்க வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வரும் நவ., 10ல் ஓய்வு பெறுகிறார். சமீபத்தில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அவரது வீட்டில் நடந்த பூஜை நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். இது, அரசியல் ரீதியில் விமர்சனங்களை எழுப்பின.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி சந்திரசூட் இது குறித்து கூறியதாவது:என் வீட்டில் நடந்த பூஜையில் பிரதமர் பங்கேற்றதில் என்ன தவறு இருக்கிறது. அவருடன் வழக்குகள் தொடர்பாக எதுவும் பேசவில்லை.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒருவர் பதவியேற்றதும், அவரது வீட்டுக்குச் சென்று முதல்வர் சந்திப்பார். அதுபோல, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் முதல்வரை சென்று சந்திப்பர்.எதற்காக இந்த சந்திப்புகள் நடக்கின்றன என்று கேட்க முடியுமா? இந்த சந்திப்புகளின்போது ஏதோ சமரசம் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியுமா?மாநிலத்தில் நீதித் துறை தொடர்பாக சில உள்கட்டமைப்பு வசதிகள் நடக்கும். இதற்கு, மாநில அரசுகளே நிதி ஒதுக்க வேண்டும். அதனால், அந்த திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவே இந்த சந்திப்புகள் நடக்கும்.அரசியல் நடைமுறையில் முதிர்ச்சி தேவை. அரசியலிலும் நீதித்துறை மீதும் மரியாதையும், மதிப்பும் உள்ளது என்பது, அரசியல் முதிர்ச்சி உள்ளவர்களுக்கு தெரியும். இது போன்ற சந்திப்புகளின்போது, முதல்வரோ, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியோ, எந்த ஒரு வழக்கு தொடர்பாகவும் பேச மாட்டார்கள்; அரசியல் குறித்தும் பேசப்படாது.அதுபோல, ஆக., 15, ஜன., 26, திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளின்போதும், மாநில முதல்வரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் சந்திக்க நேரிடும். இது, நீதிமன்ற பணியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.