இந்திய - அமெரிக்க உறவை கெடுப்பதா? டிரம்புக்கு எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை
வாஷிங்டன் : 'இந்தியா - அமெரிக்கா உறவு வலுப்பட பல ஆண்டு காலம் ஆனது, அவர்களை சீனாவை நோக்கி நகர்த்தி விடாதீர்கள்' என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜனவரியில் பொறுப்பேற்றதும், இந்தியாவுடனான உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு தரப்பு உறவு 40 ஆண்டுகளுக்கு பின் மிகவும் மோசமடைந்துள்ளது. முன்னர் இது 1971ல் வங்கதேசம் உருவாவதற்கு காரணமான இந்தியா - பாகிஸ்தான் போரின் போது மோசமடைந்தது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க பார்லிமென்ட் வெளியுறவுக் குழுவில் உள்ள அவரது சொந்த கட்சியினர் உட்பட எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க பார்லிமென்ட் வெளியுறவுக் குழு அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை, சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டு உதவித் திட்டங்கள் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடும். இக்குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில், 'டிரம்பின் சமீபத்திய ஆத்திரமூட்டும் வரி விதிப்பு வலுவான அமெரிக்கா - இந்தியா உறவை ஆபத்தில் தள்ளுகிறது. 'இந்த உறவை உருவாக்க பல ஆண்டு கவனமான உழைப்பு வீணாகிறது. 'அமெரிக்கா -- இந்தியா இடையே ஆழமான பொருளாதார மற்றும் மக்கள் நலன் சார்ந்த உறவு உள்ளது. தற்போது உள்ள பிரச்னையை பரஸ்பரம் மரியாதைக்குரிய முறையில் தீர்க்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
சீன துாதர் கிண்டல்
அமெரிக்கா நம் நாட்டுக்கும், பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதித்துள்ளது. அடுத்ததாக சீனாவுக்கும் 50 சதவீத வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சலுகை வழங்குகிறார். இது தொடர்பாக, நம் நாட்டுக்கான சீன துாதர் சூ பியாங் வெளியிட்ட பதிவில், 'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்' என கிண்டல் செய்துள்ளார்.