உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு வடக்கு தொகுதியில் சதானந்த கவுடா போட்டியிடுவாரா?

பெங்களூரு வடக்கு தொகுதியில் சதானந்த கவுடா போட்டியிடுவாரா?

பெங்களூரு : கடந்த ஒரு மாதத்துக்கு முன், அரசியல் ஓய்வு அறிவித்த பெங்களூரு வடக்கு தொகுதி எம்.பி., சதானந்தகவுடா, மீண்டும் போட்டியிட ஆர்வம் காண்பிப்பது, பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. ரவி, ஷோபா இந்த தொகுதிக்கு வருவதை தடுக்க, சதானந்த கவுடாவை பகடைக்காயாக உருட்டுவதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இம்முறை மூத்த எம்.பி.,க்களுக்கு சீட் இல்லையென, தகவல் வெளியானது. சிலர் வயது, உடல் ஆரோக்கியத்தை காரணம் காண்பித்து, போட்டியில் இருந்து விலகினர். தங்களுக்கு சீட் வேண்டாம் என, அறிவித்துள்ளனர். இவர்களின் தொகுதிகளில், இளம் தலைவர்களுக்கு ஆசை துளிர் விட்டுள்ளது.அதேபோன்று, பெங்களூரு வடக்கு தொகுதி எம்.பி., சதானந்த கவுடாவும், தனக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்பதை உணர்ந்து, ஒரு மாதத்துக்கு முன் திடீரென அரசியல் ஓய்வு அறிவித்தார். இம்முறை தனக்கு பதிலாக, வேறு தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என்றார்.எனவே பெங்களூரு வடக்கு தொகுதி மீது, மத்திய அமைச்சர் ஷோபா, முன்னாள் அமைச்சர் ரவி உட்பட பலர் கண் வைத்துள்ளனர். இவர்கள் பெங்களூரு வடக்கு தொகுதிக்கு வருவதை தடுக்க, பா.ஜ.,வில் ஒரு கோஷ்டி மறைமுகமாக முயற்சிக்கிறது. இந்த தொகுதியில், மீண்டும் நீங்களே போட்டியிட வேண்டும் என, நெருக்கடி கொடுத்து சதானந்த கவுடாவுக்கு ஆசை காண்பித்துள்ளனர்.'சதானந்த கவுடாவுக்கு சீட் தராவிட்டால், அவர் அதிருப்தி அடைவார். இவரை காங்கிரசுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கலாம்' எனவும், பா.ஜ.,வின் சில தலைவர்கள் அஞ்சுகின்றனர். எனவே இவருக்கே சீட் கொடுக்க வேண்டும் என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.சதானந்த கவுடாவுக்கும், போட்டியிடும் ஆசை துளிர் விட்டுள்ளது. அரசியல் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று, லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை