சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம்?
சட்டசபையில் குளிர்கால கூட்டத் தொடர் முடிந்த பின், கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இந்த அரசு வந்து 17 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது.இந்நிலையில், ஆளுங்கட்சி மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அமைச்சர் பதவி எதிர்பார்க்கின்றனர். பெலகாவியில் தற்போது சட்டசபை கூட்டம் நடக்கிறது. இது முடிந்தபின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என, கடந்த மாதம் தகவல் வெளியானது.இதனால், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை மூத்த எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படுத்த துவங்கினர். தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் எட்டு முதல் 10 பேரை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க கடந்த மாதம் முதல்வரும், துணை முதல்வரும் டில்லி சென்றனர். பின், அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறினர்.மழை நின்றாலும் துாறல் விடுவதில்லை என்பது போல், அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று முதல்வரே கூறினாலும், மூத்த எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.இந்நிலையில், நாளையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது. இதன்பின் அமைச்சரவை மாற்றம் குறித்து மீண்டும் பேச்சு துவங்க வாய்ப்புள்ளது. கடந்த முறை கோட்டை விட்ட அமைச்சர் பதவியை இம்முறை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக உள்ளனர். ஆனாலும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். - நமது நிருபர் -