பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்; யானை வழிமறித்ததால் பரபரப்பு
பாலக்காடு; பாலக்காடு அருகே, பிறந்த குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், காட்டு யானையிடம் சிக்கியவர்கள் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், மருத்துவமனையை அடைந்தனர்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி வனப்பகுதி. இங்குள்ள தேயிலை தோட்டத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஜய்சர்தார், மனைவி சாம்பா,20, இருவரும் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சாம்பாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இத்தகவலை, நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மையத்திலுள்ள செவிலியர் சுதினாவிடம், சாம்பாவின் கணவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூஜியுள்ளார்.அதன்பின், பணியாற்றும் நிறுவனத்தின் டிரைபர் சாபு, மருந்தாளுனர் மித்லாஜ் ஆகியோர், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிறிது துாரம் சென்றதும், பிரசவ வலி அதிகரித்ததால், ஜீப்பை ஓரம் கட்டி நிறுத்தி, அவரது கணவரும், மருந்தாளுனரும் சேர்ந்து பிரசவம் பார்த்ததில், சாம்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவல் அறிந்து, மருத்துவமனை செவிலியர்களான சுதினா, ஜானகி இருவரும் சம்பவ பகுதிக்கு சென்றனர். மருத்துவரின் அறிவுரையின்படி சாம்பா மற்றும் குழந்தைக்கு வேண்டிய பராமரிப்புகளை செய்தனர்.அதன்பின், மருத்துவமனைக்கு புறப்பட்ட போது, வழித்தடத்தில் காட்டு யானை ஜீப்பை வழி மறித்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று, பட்டாசு வெடித்து, இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், யானையை விரட்டினர். தாய் மற்றும் சேய்க்கு, நெம்மாரா தாலுகா மருத்துவமனையில், சிகிச்சை அளித்த பின், பாலக்காடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.