உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா தப்பிய பெண் 25 ஆண்டுகளுக்கு பின் கைது

அமெரிக்கா தப்பிய பெண் 25 ஆண்டுகளுக்கு பின் கைது

புதுடில்லி : ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி அரசுக்கு 1.44 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திவிட்டு, 1999ல் அமெரிக்கா தப்பிய பெண்ணை, 25 ஆண்டுகளுக்கு பின் சி.பி.ஐ., கைது செய்தது.புதுடில்லியைச் சேர்ந்தவர் மோனிகா கபூர். இவர், 1990களில், 'மோனிகா ஓவர்சீஸ்' என்ற பெயரில் நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை டில்லியில் நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக அவரது சகோதரர்கள் ராஜன் கன்னா மற்றும் ராஜிவ் கன்னா ஆகியோர் அதே நிறுவனத்தில் பணியாற்றினர்.கடந்த 1998ல் போலி ஏற்றுமதி ஆவணங்கள், கூரியர் ஆவணங்கள், பில்கள் ஆகியவற்றை தயார் செய்து அரசுக்கு அளித்தனர்.அதன் அடிப்படையில் ஏற்றுமதி செய்த பொருளின் மூலப்பொருட்களை மீண்டும் வரியில்லாமல் கொள்முதல் செய்யும் ஆறு உரிமங்களை பெற்றனர்.இதன் அடிப்படையில் தங்க நகை ஏற்றுமதி செய்த போலி ஆவணங்களை காட்டி, 2.36 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வரியின்றி இறக்குமதி செய்தனர். இதனால், அரசுக்கு 1.44 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், மோனிகா 1999ல் அமெரிக்கா தப்பினார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., 2004ல் மோனிகா கபூர் மற்றும் அவரின் இரு சகோதரர்கள் மீது வழக்கு பதிந்தது. 2006ல் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களை நாடு கடத்த முடியாத நிலை இருந்தது. கடந்த 2010ல் இருந்து அவரை நாடு கடத்தும் வழக்கு, அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின் மோனிகா கபூரை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதித்தது. உடனடியாக அவர் டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !