உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாகரத்தை எதிர்த்து 32 ஆண்டாக போராடும் பெண்: சுப்ரீம் கோர்ட் வேதனை

விவாகரத்தை எதிர்த்து 32 ஆண்டாக போராடும் பெண்: சுப்ரீம் கோர்ட் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தன் கணவருக்கு வழங்கப்பட்ட விவாகரத்தை எதிர்த்து, கர்நாடகாவைச் சேர்ந்த பெண், 32 ஆண்டுகளாக போராடி வருவதை உச்ச நீதிமன்றம் கனிவுடன் பரிசீலித்தது. அவருக்கு நீதித்துறை நடைமுறைகள் பெரும் அநீதியை இழைத்துள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தம்பதிக்கு, 1991ல் திருமணம் நடந்தது. அதற்கடுத்த ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின், அந்த கணவர், மனைவியை விட்டு பிரிந்து சென்றார். அதே நேரத்தில் அவருக்கு சொந்தமான அந்த வீட்டில், அவருடைய தாய், மனைவி மற்றும் ஆண் குழந்தை வசித்து வருகின்றனர்.விவாகரத்து கேட்டு அந்த கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டது. முதலில், 2006ல் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேல்முறையீடு

இந்த விவகாரத்தை பரிசீலனை செய்யும்படி, குடும்ப நல நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு மூன்று முறை குடும்ப நல நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.மேலும், ஒருமுறை நிவாரணமாக, குடும்ப நல நீதிமன்றம் நிர்ணயித்த, 25 லட்சம் ரூபாயை, 20 லட்சம் ரூபாயாக மாற்றியது. இதை எதிர்த்து அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமர்வு கூறியுள்ளதாவது:திருமணமாகி ஓராண்டுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால், இருவருக்கும் இடையே தற்போது சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால், விவாகரத்து வழங்கியதை உறுதி செய்கிறோம்.அதே நேரத்தில், இந்த வழக்கில், நீதித்துறை நடைமுறைகளால் இந்தப் பெண்ணுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குடும்ப நல நீதிமன்றம் முறையாக விசாரிக்காமல், கணவருக்கு சாதகமாகவே மூன்று முறை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த ஆணின் தாயும், இந்தப் பெண்ணுடன் வசித்து வருகிறார். தன் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதில் இருந்து, இந்த விஷயத்தில், தவறு எந்தப் பக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், குடும்ப நல நீதிமன்றம் அவற்றை கவனிக்கவில்லை. தனக்கு பிறந்த மகனின் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் அவர் எந்தச் செலவும் செய்யவில்லை. அதைப் பற்றி கவலையும் படவில்லை.

இழப்பீடு

இதனால், விவாகரத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அவர் வழங்க வேண்டும். அதுவும், 2006ல் இருந்து 7 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். மேலும், தற்போது, இந்தப் பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையையும் அவருக்கே வழங்க வேண்டும். அதில், கணவர் எந்த உரிமையும் கோர முடியாது.அதுபோல, கணவருக்கு வேறு ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அதை வேறு யாருக்காவது மாற்றியிருந்தாலும், அதில், அவருடைய மகனுக்கும் உரிமை உள்ளது. மூன்று மாதங்களுக்குள், இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால், விவாகரத்து செல்லாது. மேலும் அவர் மீது சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை, குடும்ப நல நீதிமன்றம் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganapathy Subramanian
செப் 06, 2024 12:09

ஒரு வருடத்தில் பிரிந்து போனால் அவளுக்கு வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடுமா? இவளே உங்கள் மகளாக இருந்திருந்தால் உங்களுடைய வாதம் இப்படியே இருக்குமா? ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு பெற்றவளையும் தவிக்க விட்டு வாழ வந்தவளையும் ஏமாற்றிவிட்டு போனவனுக்கு வக்காலத்தா?


அப்பாவி
செப் 05, 2024 05:57

நமது சட்டமேதைகள் வகுத்த சட்டங்களின் படி செயல்படும் நீதிமன்றங்களின் லட்சணம். அவிங்களே ஒத்துக்கிட்டாங்க.


sankaran
செப் 04, 2024 09:00

ஆஹ மொத்தம் இழப்பீடுக்குதான் கோர்ட்டுக்கு போயிருக்கிறாள் இந்த பெண்மணி... 25 லட்சம் ரூபாய் 20 வருஷத்துக்கு முன் பெரிய பணம்தான்... வெறும் 1 வருஷத்துக்கு மேலும் மேலும் பணமா ?.. கோர்ட் இதை encourage பண்ணினாள் நாளை எல்லா பெண்களும் பணத்துக்காக இதே வேலைய செய்ய ஆரம்பிபர்ஹல் .. பாலிவுட் நடிகைகள் ஏற்கனேவே இதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ... அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இது அன்றாட நடைமுறை..


பேசும் தமிழன்
செப் 04, 2024 08:54

விவாகரத்து விஷயத்தில்... 22 ஆண்டுகள் போராட வேண்டி உள்ளது.... ஆனால் மாற்று மதத்தை சேர்ந்த ஆட்கள்..... தலாக்.... தலாக்.... தலாக்.... என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.... என்னங்கடா உங்க சட்டம்.... நாடு விளங்கிடும்.... அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வாருங்கள்.... இல்லை சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்ககள்.


Palanisamy Sekar
செப் 04, 2024 06:32

பெண் என்றால் இளக்காரம் இங்கேதான். 30 வருட காலம் என்பது வாழ்வின் பாதி பங்கு. இந்த முப்பதாண்டுகளில் இந்த பெண் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்? அந்த கணவனின் தாயாரையும் இந்த பெண்ணிடம் இருக்கின்றார் என்றால் ஆச்சர்யம்தான். அப்போ அந்த பெண் மீது எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை என்றுதானே அர்த்தம். மூன்றுமுறை விவாகரத்து வழங்கிய அந்த மாமேதைகளை பணியிலிருந்தே நீக்கி இருக்க வேண்டும். பல போலி நீதிபதிகளின் பின்புலத்தை ஆராய வேண்டும். விவாகரத்து நடைமுறையை இன்னும் திருத்தும் செய்திடவேண்டும்.


முக்கிய வீடியோ