மேற்கு வங்க மதுபான விடுதியில் பெண்கள் பணிபுரிய அனுமதி
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், பார்கள் எனப்படும் மதுபான விடுதிகளில் பெண்கள் பணிபுரிய அனுமதி வழங்கும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றியது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் நேற்று, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா, மேற்கு வங்க கலால் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.தற்போது அமலில் உள்ள சட்டத்தில் மது அருந்தும் வசதி கொண்ட பார்களுடன் கூடிய கடைகளில் ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும். பெண்கள் பணிபுரிய தடை உள்ளது. இது, பாகுபாடான சட்டம் என கூறிய அமைச்சர் சந்திரிமா, பார் வசதி உடைய கடைகளில் பெண்களும் பணிபுரியும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.மேலும், மேற்கு வங்க விவசாய வருமான சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறு தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.