உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் உரிமைத்தொகை திட்டம் சத்தீஸ்கரில் 5 லட்சம் பேர் நீக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் சத்தீஸ்கரில் 5 லட்சம் பேர் நீக்கம்

ராய்பூர்: சத்தீஸ்கரில், மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் இருந்து, 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில், 2023ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் வாக்குறுதியாக, 'பா.ஜ., வெற்றி பெற்றால் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் அங்கு பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராய் பூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும், 'மஹாதரி வந்தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். திட்டத்தில் இருந்த, 70.12 லட்சம் பெண்களுக்கான, 655.57 கோடி ரூபாய் நிதியை, அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான பணியையும் துவங்கி வைத்தார். இந்நிலையில், இந்த திட்டத்திற்கான 20வது தவணையில், 64.94 லட்சம் பெண்களுக்கு மட்டுமே தொகை விடு விக்கப்பட்டது, மத்திய அர சின் அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. திட்டம் துவங்கி, இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், 5 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டது குறித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பிஉள்ளது. இந்நிலையில், லட்சக்கணக்கான பயனாளிகள் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சத்தீஸ்கர் அரசு மறுத்துள்ளது. இது குறித்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ராஜ்வாடே கூறியதாவது: இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் பயனாளிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், உயிரிழந்த, 64,858 பேர் நீக்கப்பட்டனர். போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த, 40,728 பேர் நீக்கப்பட்டனர். நான்கு லட்சம் பேர், தங்கள் வங்கிகளில் கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காததால், அவர்களுக்கான தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை முடிந்ததும், அவர்களுக்கான தொகை வழங்கப்படும். புதிய பயனாளிகள், இணையதள பதிவு வாயிலாக விரைவில் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ